வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
இடைக்காலம் :
பொதுமக்கள் முற்று முழுதாக நிருவாகத்தில் பங்குபற்ற ஆரம்பித்தகாலமாக
இது அமைந்தது. 1880இல் இக்கோயிலுக்கான பரிபாலன சபை முதன்முதலாக அமைக்கப்பட்டதெனக் குறிப்பிடப்படுகிறது. இச்செயற் குழுவில் சின்னக் குட்டியர், சண்முகம், கணபதிப்பிள்ளை ஆகியோர் இடம் பெற்றதாக அறியப்படுகிறது. 1902ஆம் ஆண்டு தை மாதம் எழுதப்பட்ட 1702 ஆம் இலக்க சாசனப்படி இச்சபை உறுதிப்படுத்தப்பட்டது. இச்சாசனம் நொத்தாரிசு ஐ. அம்பலவாணர் அவர்களால் எழுதப்பட்டது.
1902 ஆம் ஆண்டு கூட்டப்பெற்ற கூட்டத்தில் ஐவர் கொண்ட பரிபாலன சபை
தெரிவுசெய்யப்பட்டது.
1. க. அம்பலவாணர் (கந்தப்பு உபாத்தியாயர் மகன்)
2. செ. கனகசபாபதிப்பிள்ளை(இராச உபாத்தியாயர்)
3. வை. செல்லப்பா
4. சீ. கதிரவேலு
5. நா. முருகர்
இந்தப் பரிபாலன சபையின் காலத்தில் தான் பிள்ளையாரின் ஆலயத்திற்கு கருங்கல்லால் திருப்பணி செய்யவேண்டும் என்னும் முயற்சி ஆரம்பமானது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆலயத்திற்கு மடப்பள்ளி, யாகசாலை, வசந்தமண்டபம், சுற்றுமதில் சுதையினாலே கட்டப்பட்டன. ஆலயத்திற்குக் காண்டாமணியும் இக்காலத்தில் பொருத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆலயத்தில் சுதையினால் கட்டப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் ஹற்றன் நா. சபாபதிப்பிள்ளை அவர்களால் கட்டப்பட்டது. மணி நாகலிங்க உபாத்தியாயரினால் உபயமாக வழங்கப்பட்டது.
இன்றும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எழுந்தருளி விநாயகர் விக்கிரகம் இக்காலத்தில் உருவாக்கப்பட்டது : திரு. க. அம்பலவாணர் அவர்களால் உபயமாக வழங்கப்பட்டது. இதன்பின்னர் 10 தினங்கள் கொண்ட திருவிழாக்கள் நடைபெற்றன.
கடந்த நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் கருங்கல் திருப்பணிக்கென 22 வருடங்கள் நிதி சேகரிக்கப்பட்டது. 1920 இல் ஸ்ரீலஸ்ரீ கை. நவசிவாயக் குருக்கள் தலைமையில் கருங்கல் திருப்பணி ஆரம்பமானது. கோயிலின் கர்ப்பக்கிருகம், சபாமண்டபம், மகாமண்டப வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்கால
கட்டத்தில் வை. பொ. சோமசுந்தரம், க. வைத்தியலிங்கம், படிகலிங்கம் ஆகியோர் பெரும் பங்கு வகித்தனர். 1930 களில் ஆரம்பகாலத்தில் க. வைத்தியலிங்கம், சே.பொன்னையா, மு.குமாரசுவாமி, சே. கந்தையா, நா. சரவணமுத்து ஆகியோர் கருங்கல் திருப்பணியில் பெரும்பங்கு வகித்தனர். பூசகர்களாக ஆரம்பத்தில் சைவர்களும் பின்னர் பிராமணர்களும் இடம் பெற்றனர்.
1938ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ தி. கைலாசநாதக் குருக்கள் தலைமையில் கூட்டம் கூட்டப்பெற்று 15 உறுப்பினர்கள் கொண்ட பரிபாலனசபை தெரிவு செய்யப்பட்டது. இதனை 1938 ஆம் ஆண்டு நொத்தாரிசு கா. வினாசித்தம்பி முன்பாக எழுதப்பட்ட சாசனம் உறுதிப்படுத்தப்படுகிறது. பின் வருவோர் பரிபாலன சபையில் இடம்பெற்றனர்.
1. ம. தம்பு
2. சே. பொன்னையா
3. மு. சின்னையா
4. நா. சுப்பிரமணியம்
5. சு. ஏரம்பு
6. மா. கணபதி
7. வே. பேரம்பலம்
8. கு. சங்கரப்பிள்ளை
9. இ. வைத்தியலிங்கம்
10. நா. அமிர்தலிங்கம்
11. ச. திருஞானசம்பந்தர்
12. த. அருளம்பலம்
13. வே. தருமலிங்கம்
14. வ. அம்பலவாணர்பிள்ளை
15. வி. நாகலிங்கம்
இப்பரிபாலன சபைக்கு சிறிது காலம் சே. பொன்னையா தலைவராக இருந்தார். இவர் காலமாக 1940இல் சே. கந்தையா தலைவரானார். 1940 களில் தொடர் திருப்பணிகள் நடைபெற்றன. 1948 இல் ஊரெழு சிவபூர் பாலசந்திரக் குருக்களால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந் நிகழ்வில் சைவக்குருக்கள்மார் பிராமணக் குருக்கள்மார் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.