வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
1991 புலப்பெயர்வுக்குப் பின்னர் :
நாட்டின் இனப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்டு வருகின்ற யுத்தங்களின் விளைவாக 1991 ம் ஆண்டு (18 – 10 – 1991) நவராத்திரி காலத்தில் வேலணையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக எமது ஊர்மக்கள் அனைவரும் யாழ்ப்பாண நகரம் நோக்கி நகர்ந்தனர். எமது கிராம சமூகக் கட்டமைப்புக்கள் எல்லாம் பாதிப்பிற்குள்ளாயின.
இந்த நேரத்தில் எமது ஆலயத்தில் 1965ஆம் வருடம் தொடக்கம் நித்திய பூசை ஆற்றி வந்த இ. சோமாஸ்கந்த சர்மா அவர்கள் இடம் பெயரும் நோக்குடன் சிறிது துரம் சென்றபின்னர் பிள்ளையாரின் புதுமையோ என்னவோ திரும்பவும் கோயிலுக்கு திரும்பிவந்து இடம் பெயராமல் பிள்ளையாருடன் தங்கிவிட்டார். புலம்பெயர் காலத்திலும் எமது பகுதியில் பூசை நடைபெற்ற ஒரேயொரு ஆலயம் என்றால் எமது முடிப் பிள்ளையார் ஆலயம் தா. அந்தவகையில் பிள்ளையரின் திருவருளை வியந்தவர்கள் பலர். இடம்பெயர முடியாத வயோதிபர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையமாக எமது ஆலயம் விளங்கியது. கோயில் ஐயா பிள்ளையாருக்கும் அவர்களுக்கும் ஆதரவு வழங்கி உதவினார்கள். கோயில் ஐயா அவர்களின் இப்பணி காலத்தினால் மறக்க முடியாத ஒன்றாகும். இது எமது ஆலயத்தின் பாதுகாப்புக்கு பெரும் உதவியாகவிருந்தது.
இடம் பெயர் காலத் தில் எமது ஆலயத்தோடு தொடர்பு பட்ட அடியார்கள் பலர் இடம் பெயர் நிலையிலும் எம்பெருமானின் பூசை ஒழுங்குகள் நடைபெறதம்மாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். அதற்கேற்ற பயனுறுதி வாய்ந்த பலநடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர் பணி போற்றுதற்குரியது. இவர்களுடைய முயற்சிகள் இன்று பயன்கொடுத்துக் கொண்டிருக்கின்றன.