அந்த மூன்று நாட்கள்
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கின்ற பழமொழியினையோ அல்லது ஆவிகள் பழிவாங்குவதைப் பற்றியோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அன்றைய பொழுதும் வழமை போன்றே விடிந்தது. காகங்கள் கரைந்திருந்தன. சேவல்கள் அதிகாலையிலேயே கூவிவிட்டிருந்தன. காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து அன்றைய தினநாட்காட்டியில் தேதியினைக் கிழித்தேன்.
ஆவணி 22, 1990
தேநீர் பருகுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில்தான் அந்தச் சத்தங்கள் எம்செவிகளை வந்தடையத் தொடங்கியிருந்தன. தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சத்தங்கள் யாரோ இந்தக் காலை வேளையில் விண்கட்டிப் பட்டம் பறக்க விடுகிறார்களோ என்கின்ற சந்தேகத்தையே ஆரம்பத்தில் எழுப்பியிருந்தாலும், அதனுடன் சேர்ந்து கேட்ட உலங்குவானூர்தியின் சத்தம் அட்ரீனலின் சுரப்பியினைத் தூண்டி விட்டிருந்தது. பொம்மர் என்று அழைக்கப்படும் சியாமாசெட்டி ரக குண்டுவீச்சு விமானங்களின் ஓசையுடன் உலங்குவானூர்திகளின் ஓசையும் கேட்கவே புரிந்து விட்டது, எங்கோ தாக்கப்போகிறார்கள் என்பது. பெரும்பாலும் மக்கள் அதிகம் நடமாடும் சந்திகளில் தான் குண்டுவீச்சுக்கள் நடைபெறும் என்கின்ற பட்டறிவு ஏற்கனவே இருந்ததாலும் எங்களின் வீடும் வங்களாவடிச் சந்திக்கு அண்மையில் இருந்ததாலும் உடனேயே நாங்கள் அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் சென்று விட்டோம்.
தொடர்ந்து சில நிமிடங்கள் வட்டமிடுவதை ஓசையில் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாய் இருந்தது. திடீரென மிகுந்த வீச்சுடன் விமானங்கள் ஒலிஎழுப்ப “றேஸ் பண்ணுறான். எங்கையோ குத்தப்போறான். காதைப்பொத்துங்கோ” எனக்கேட்ட குரல் தொடர்ந்து எழும்பிய பாரிய வெடியோசைக்குள் கரைந்து போனது. அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசிவிட்டு விமானங்களின் ஒலி மறையவே உலங்குவானூர்திகள் தங்கள் கைவரிசைகளினை 50 கலிபர் துப்பாக்கிகளினூடாகக் காட்டத் தொடங்கியிருந்தன. ஏறத்தாழ ஒரு மணி நேர இடைவேளையின் பின் ஓசைகள் அடங்கியிருக்கவே பதுங்கு குழியினை விட்டு வெளியே வந்தோம். வந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் உலங்குவானூர்திகளின் ஓசை நெருங்கவே மீண்டும் பதுங்குகுழியினைத் தஞ்சமடைந்தோம். அன்றைய பொழுது பதுங்குகுழிக்குள்ளேயே கழிந்தது.
அது யாழ் கோட்டைக்குள் இருந்த சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருந்த காலம். ஆகவே வேலணையில் எமது பகுதிகளிலும் சிறிலங்காவின் விமானப்படையினர் இடையிடையே வான்வழித் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் அன்றைய நாள் பூராவும் விமானப்படை விமானங்கள் எம்மை பதுங்குகுழிகளுக்குள் முடக்கியிருந்தனர். அன்றைய இரவும் அடிக்கொரு தடவை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களால் வீடுகளிற்குள் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
மறு நாள் காலையும் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் வந்து தங்கள் கடைமைகளைச் செய்திருந்தன. ஆயினும் முதல் நாளைப் போலல்லாது இடையே சில மணித்தியாலங்கள் நீடித்த அமைதியில், ஊர்காவற்றுறையில் சிறிலங்காப் படையினர் தரையிறக்கப்பட்டு முகாம் அமைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிந்தது. வீட்டின் யன்னல் கண்ணாடிகள் யாவும் நொறுங்கி வீட்டிற்குள் கால்வைக்க முடியாதபடி செய்திருந்தன. வீட்டுச் சுவர்களில் விரிசல்களைக் காணமுடிந்தது. கூரையோடுகள் விலகி நீக்கல்களை ஏற்படுத்தியிருந்தன. முந்தைய தினப் பட்டினி வேறு வயிற்றைக் கிள்ளியது. அவசரஅவசரமாக உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் விமானங்கள். உடனேயே பதுங்குகுழி. விமானச் சத்தங்கள் குறைந்ததும் மீண்டும் சமையலறை என்றவாறாக ஒருமாதிரி அன்றைக்கு எங்களால் உணவு உட்கொள்ள முடிந்திருந்தது. அன்றைய இரவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்களை அடுத்து அன்றைய இரவையும் பதுங்குகுழியிற்குள்ளேயே கழிக்க வேண்டிய நிலை. தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற குண்டுவீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் எத்தனைபேர் பாதிக்கப்பட்டார்களோ என்கின்ற கவலைவேறு.
மறுநாள் பொழுதும் விடிந்தது.
அது 1990 ஆவணி 24ம் திகதி.
கடந்த இருநாட்களிலும்விட அதிகமான விமானங்களினதும் உலங்குவானூர்திகளினதும் இரைச்சல்கள் காதைக் குடைந்தன. குண்டுத்தாக்குதல்களால் பதங்குகுழியே அதிர்ந்தது. பின் பத்து மணியளவில் குண்டுவீச்சு விமானங்களின் ஓசை குறைந்துவிட உறுமிஉறுமியவாறே உலங்குவானூர்திகள் வட்டமிட்டுக் கொண்டும் இடையிடையே 50 கலிபர்களால் சடசடத்துக் கொண்டுமிருந்தன. மாலை மங்குகையில் யாவும் அமைதியாகி விட்டிருந்தது. பதுங்குகுழிகளை விட்டு வெளியே வந்து அயலவர்களுடன் உரையாடத் தொடங்கிய போதுதான் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின.
திரிவிடபலய என அழைக்கப்படும் முச்சக்தி படை நடவடிக்கையாக, சிறிலங்காவின் அந்நாளைய நட்சத்திரத் தளபதிகளான அப்போதைய வடமாகாண படைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும் யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகியோரின் நேரடி வழி நடத்தலில் ஊர்காவற்றுறையில் தரையிறக்கப்பட்டு இருநாட்கள் நிலை கொள்ள வைக்கப்பட்டிருந்த சிறிலங்காப் படையினர் கரம்பன், நாரந்தனை, சரவணை, பள்ளம்பலம், வேலணை, சாட்டி, மண்கும்பான் வழியாக அன்றைக்கே அல்லைப்பிட்டியை அடைந்திருந்தனர். அவர்கள் சென்ற வழிகளில் இருந்த கிராமங்களையெல்லாம் சிதைத்து அழித்திருந்தனர். அகப்பட்டவர்களையெல்லாம் சுட்டும் வெட்டியும் கொன்று விட்டிருந்தனர் பலரை இறந்துவிட்டதாக எண்ணிக் காயங்களுடனேயே வெளிகளுக்குள்ளும் பற்றைகளுக்கும் விட்டுச் சென்றிருந்தனர். உறவினர்கள் தங்கள் காயப்பட்ட உறவுகளையும் கொல்லப்பட்ட சடலங்களையும், வேலணை அராலிப் பகுதியில் இராணுவத்தினர் சென்ற பாதையின் அருகேயிருந்த காணிகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் தேடியெடுத்துக் கொண்டிருந்தனர். அன்றைய பொழுதினில் மட்டும் சிறுவர்கள் உட்பட 350 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டிருந்தனர். பலர் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்டுமிருந்தனர். அதைத் தவிரவும் வேலணை மேற்குப் பிரதேசத்திலும், சாட்டி மாதா கோவில் மீதும் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலிலும் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தும் கொல்லப்பட்டுமிருந்தனர்.
(மறுநாள் ஓகஸ்ற் 25ம் நாள் சிறிலங்கா இராணுவத்தினர், வேலணைத் தீவினை அடுத்திருந்த மண்டைதீவிற்குள் நுழைந்திருந்தனர். அங்கே அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் சொல்லி மாளாதவை.)
தொடர்ந்து வந்த நாட்களில் ஊரைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் இடம்பெயரவும் புலம் பெயரவும் வேலணை வெறிச்சோடத் தொடங்கியது. பின் 1990 செப்ரம்பர் 26 இல் யாழ்கோட்டையிலிருந்து பின்வாங்கிய படையினர் மண்டைதீவில் தரித்திருந்து பின் 1990 செப்ரம்பர் 28ஆம் நாள் தாங்கள் வந்த பாதை வழியே, குண்டுவீச்சுகளை நடாத்திவாறே மீண்டும் பின்வாங்கி ஊர்காவற்றுறையைச் சென்றடைந்தனர் பின் மீண்டும் வலம்புரி இராணுவ நடவடிககை மூலம் 1991 இன் நடுப்பகுதியில் தீவகப்பகுதி முழுமையாகப் படையினரால் ஆக்கிரமிக்கப் படுவதற்கு முன்பாக அங்கு வசித்த மக்கள் யாவரும் தங்கள் ஊர்களைவிட்டு வெளியேறியிருந்தனர்.
அது 1992 ஆவணி 08ஆம் நாள்
தீவகப் பகுதியிலிருந்து யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் பூர்த்தியாக்கிவிட்டு, படைநடவடிககையினை ஆரம்பிப்பதற்கு முதல்நாள். சில இராணுவ வாகனங்களில் சிறிலங்காவின் வடமாகாண படைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும் யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகிய நட்சத்திரத் தளபதிகளுடன் ஏனைய முக்கியமான தளபதிகளும் இறுதி நேரக் கள யதார்த்தத்தை அறிவதற்காக வேலணை அராலித்துறைக்கு விஜயம் செய்திருந்தார்கள். அனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிப்பதாகவே அவர்களுக்குப் பட்டது. அராலிச் சந்திக்கு அண்மையில் அவர்களின் வருகைக்காக உலங்குவானூர்தியொன்று காத்திருப்பதாகத் தகவல் வந்தது.
சற்றேறக்குறைய இரு வருடங்களுக்கு முன்னர் இதே அராலி வெளியில் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவித்துவிட்டுச் சென்ற அந்த சிறிலங்கா இராணுவத் தளபதிகள் தங்களுக்காகக் காத்திருக்கும் உலங்கு வானூர்தியை நோக்கி ஒரே வாகனத்தில் குதூகலத்துடன் புறப்பட்டார்கள், அவர்களின் வரவிற்காய் ஆவலுடன் காத்திருக்கும் கண்ணிவெடியை அறியாமல்.
இப்போது மறுபடியும் இந்தப் பதிவின் முதற் பந்திக்குச் செல்லுங்கள்.
முள்ளிவாய்க்கால் பற்றி என்கிறீர்களா?
பொறுத்திருந்து பார்ப்போம். தெய்வம் நின்றுதான் கொல்லுமாமே.
*****
பின்குறிப்பு: இந்தப் பதிவு சம்பந்தமான சில தகவல்களைப் பெறுவதற்காக இணையத்தினைத் துளாவியபோது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. இது சம்பந்தமான தகவல்கள் ஒரே ஒரு தளத்தில் மட்டுமே காணப்பட்டது. அதில் சில தகவல்களும், சில சம்பவங்கள் இடம்பெற்ற நாட்களும் தவறாகக் காணப்பட்டன. பின் வேலணையைச் சேர்ந்த பலரைத் தொடர்பு கொண்டபோதும் அவர்களால் இச்சம்பவம் நடைபெற்ற அந்த மூன்று நாட்களின் திகதிகளையும் சரியாக நினைவுபடுத்த முடியவி்ல்லை. ஈற்றில் நண்பர் ஒருவரின் உதவியுடன் அவரின் உறவினரூடாகவே சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்தச் சம்பவத்தில் அவர் தனது நெருங்கிய உறவுகள் பலவற்றை இழந்திருந்தார். தகவல்களைத் தந்துதவிய அவருக்கும், அவற்றைப் பெற உதவிய நண்பனுக்கும் எனது நன்றிகள் ****