எனது மரண அழைப்பிதழ்
by
valasu
·
Published
· Updated
அன்புடையீர்!
நித்தம்நித்தம் இவ்வாழ்க்கை
நித்தியமென்ற நினைவினில்
நாளிகைகளைக் கழித்தவொரு
விடுமுறைப் பொழுதினில்,
மரணதேவன் எனை
அரவணைக்கவிருப்பதை
அறிவித்துச் சென்றான்.
இன்றோ, நாளையோ,
நாளை மறுநாளோ,
இல்லை இன்னும்சில
யுகங்கள் கழித்தோ
எனக்கான மரணம்
நிச்சயிக்கப்பட்டு விட்டது.
கொரோனாத் தொற்றினாலோ, அன்றி
கொடிய வியாதியொன்றினாலோ நான்
கொல்லப்படக் கூடும்.
அரவம் கொத்தியோ, இல்லை
கொத்துக் குண்டுகளால் சிதறுண்டோ
என் அரவம் இல்லாமல் போகலாம்.
காக்கிச்சட்டைக் கைதினாலோ, இல்லை
வெள்ளைவான் கடத்தலினாலோ
நான் காணாமல் போகப்படலாம்.
பன்றிக் காய்ச்சலிலோ, அன்றி
பறவைக் காய்ச்சலிலோ
படடென்றென்னாவி பறிக்கப்படலாம்.
யாருக்குத் தெரியும்? இல்லை
இப்படியில்லை என்றொருமுறையில்
நான் இறந்துவிட்டிருக்கலாம்.
எது எப்படியோ எனக்கான
உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு
அதிர்ஷ்டவசமாய் முன்கூட்டியே
அறிவிக்கப் பட்டிருக்கிறது.
செத்துவிடமுன் செய்துவிடவேண்டியவை
சித்தத்தில் சிந்தனையாய் சீறியெழுகிறது.
காலம் போதுமோ?
ஞாலம் தாங்குமோ?
புவியெனக்கிட்ட கடைமைகளை
நிறைவாகச் செய்வேனோ? -இல்லை
செவிகேளா மனிதனாய்க்
குறைகேட்டு நிற்பேனோ?
புண்படுத்திய உள்ளங்களை
மயிலிறகாற் தொடுவேனோ?-பின்
பண்பட்ட அவர்மனதால்
மன்னிப்பைப் பெறுவேனோ?
சத்தியமாய்ச் சொல்கிறேன்,
என்ன நடக்குமென்றோ
எது நடக்குமென்றோ
நடுக்கமில்லை எனக்கு.
இறப்பின் அழைப்பினை
ஏற்றுக் கொண்டதனால்
அழைப்பு விடுக்கிறேன்
அன்புடையீரே!
எப்போதேனும் ஒருதடவையிதை
நீங்கள் வாசிக்கும் கணத்தினில்
காலனுடன் நான்
கைகுலுக்கிக் கொண்டிருக்கக்கூடும்.
அப்போது உங்களுக்கெல்லாம்
அழைப்பனுப்பிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை.
ஆதலினால், இத்தால் சகலமானவரும்
இவ்வழைப்பை ஏற்றுக்கொள்வீர்களாக!