தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை
கலாநிதி தேவராசா முகுந்தன்
முதுநிலை விரிவுரையாளர்
இலங்கைத் திறந்த பல்கலைக் கழகம்
1.0 அறிமுகம்
வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு, காரைநகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி இலங்கையின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ள தீவுத் தொகுதி தீவகம் என்றழைக்கப்படுகின்றது. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ளது.
தீவகமானது புவியியல் ரீதியாக தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்புக்கும் இடையில் அமைந்துள்ளதால் வரலாற்று ரீதியாக பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியில்சிறப்பிடம் பெற்றுள்ளது (குகபாலன் 1994). தீவகத்தில் இருந்து காலத்திற்குக்காலம் தனிநாயகம் அடிகள் போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு பகுதியான தீவகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மற்றைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது தீவகமானது கல்வி வசதி, சுகாதார வசதி, குடிநீர, போக்குவரத்து, மின்சாரம அபிவிருத்தி போன்ற பௌதீக நிலைமைகள் குறைந்த பிரதேசமாக உள்ளது. இதன் காரணமாக தீவக மக்கள் பல்வேறு இடப்பெயர்வுகளை மேற்கொள்ளகின்றனர். தீவக மக்கள் யாழ்ப்பாணத்திற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்நது வாழ்கின்றனர். 1953 ஆம் ஆண்டில் அப்போதைய அரசு அதன் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பல்வேறு குடியேற்றங்களை ஏற்படுத்தியது. இதன்போது தீவகத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கைiயான மக்கள் கிளிநொச்சியில் குடியேறினர். இதனை விட கடந்த காலப்போர் நடவடிக்கைகளாலும் தீவகத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தனர்.
1.1 தீவகத்தில் கல்வி நிர்வாகம்
தீவகக் கல்வி வலயமானது நெடுந்தீவுக் கல்விக் கோட்டம், ஊர்காவற்றுறைக் கல்விக் கோட்டம், வேலணைக் கல்விக் கோட்டம், காரைநகர்க் கல்விக் கோட்டம் என நான்கு கல்விக் கோட்டங்களாக வகுக்கப்பட்டள்ளது. தீவகத்தின் தற்போதைய கல்விநிலைமையானது மோசமாகவுள்ளதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில் இக்கட்டுரையானது, தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்போதைய கல்வி நிலைமையான கடந்த 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுப் பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய முயல்கின்றது.
2.0 ஆய்வுப் பிரச்சினை
தீவகக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகள்ஒப்பீட்டு ரீதியில் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பரீட்சைப் பெறுபெறுகளை விடக் குறைவாக உள்ளன. க.பொ.த. (சா. த) கற்ற ஒருவர் உயர்தரம் கற்க தகுதிபெற வேண்டுமாயின், அவர் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் தாய்மொழி, கணிதம் உட்பட ஆறுபாடங்களுள் மூன்று பாடங்களில் திறமைச் சித்தியுடன் சித்தியடைந்திருக்க வேண்டும். 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த. (சா. த) பரீட்சைக்குத் தோற்றியோரில் உயர்தரம் கற்கத் தகுதியடைந்தோரின் விபரம் சதவீதங்களில் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 1 : க.பொ.த. உயர் தரம் கற்கத் தகுதியானோர் சதவீதம்
ஆண்டு | தீவக வலயம் | யாழ் மாவட்டம் | வடமாகாணம் | இலங்கை |
---|---|---|---|---|
2014 | 34.0 | 64.43 | 64.19 | 69.02 |
2015 | 34.0 | 62.59 | 60.38 | 67.17 |
(மூலம்: – இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், 2015)
மேலுள்ள அட்டவணை தீவகக் கல்வி வலயத்திலிருந்து 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கு தோற்றயோரில் உயர்தரம் கற்கத் தகுதியடைந்தோரின் சதவீதம் முழு நாட்டிலிருந்தும்; இப்பரீட்சக்குத் தோற்றி உயர்தரம் கற்கத் தகுதியடைந்தோரின் சத வீதத்திலும் அரைவாசிப் பெறுமானத்தை அண்மித்தள்ளதைக் காட்டுகின்றது. மேலும் இச்சதவீதமானது யாழ் மாவட்டம், வடமாகாணம் என்பவற்றில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றியோரின் சதவீதத்திலும் பார்க்க மிகக் குறைவாக உள்ளது.