வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
வரலாறும் வளர்ச்சி நிலைகளும்
திரு. பொன்னம்பலம் அருணகிரிநாதன்
தலைவர் (அறங்காவலர் சபை)
அறிமுகம்:
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களுள் லைடன் தீவு முதன்மையானது. இங்கு உலகப் புகழ்பெற்ற இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றான ஊர்காவற்றுறை உண்டு. இத் தீவுகளுக்கெல்லாம் ஆட்சிபுரியும் மணியகாரன் பதவி வகித்தோர் நிலை கொண்டிருந்த இடம் வேலணையாகும். இதனால் வேலணை தீவுகளுக்கு ஒரு தலைநகர் போல விளங்குகிறது. வேலணை கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகளை உடையது.
வேலணை மேற்கில் கோயில் கொண்டு எழுந்தருளி அடியவர்களுக்கு எளியவராகி அருள் புரிந்து கொணிடிருக்கிறார் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார். கோயில் தாபிக்கப்பட்டிருக்கும் தலத்தின் பெயர் பெரியபுலம் என்பதாகும். இதனால் இவர் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் பலசைவக் கோயில்கள் இடித்து அழிக் கப்பட்டன என்பது வரலாறு. அப்பொழுது இக்கோயில் அவர்களது கைவரிசைக்கு அகப்படாமல் முடியோடு நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெற்று வந்தமையால் “முடிப்பிள்ளையார்” என்ற சிறப்புப் பெயரும் இக்கோயிலுக்கு உண்டு. இந்த ஆலயத்தில் தாபிக்கப்பட்ட மூர்த்திக்கு மகாகணபதி என்று கும்பாபிஷேக காலத்தில் நாமகரணம் செய்யப்பட்டதனால் மகாகணபதிப் பிள்ளையார் என்றும் வழங்கப்படுகிறது.
இத்திருக்கோயிலைச் சூழ சமய விசேட நிருவாண தீட்சை பெற்ற சைவர்கள் வசித்து வந்ததனாலும் அச்சைவர்களாலே நித்திய பூசைசெய்யப்பட்டு வந்ததாலும் அவர்களுடைய பரம்பரையினால் தாபிக்கப் பெற்றதனாலும் சைவப்பிள்ளையார் கோயில் என்றும் கர்ணபரம்பரையில் பேசப்படுவதுமுண்டு.
இந்த விநாயகப் பெருமான் கரசரணாதி அவயவங்கள் வியக்தமாக தோற்றமளிக்க செய்யப்பட்டிருக்காவிடினும் இம் மூர்த்தியை யாழ்ப்பாணத்து ஊரெழுவிலே “பெரியவர்” என்று எல்லோராலும் போற்றப்பட்ட சோமசுந்தரக் குருக்கள் அவர்கள் சுயம்பு மூர்த்திக்கு நிகரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.