ஆனந்தி
வேலைத்தளத்தில் இருக்கையில் சொரூபன் கைபேசியில் அழைத்தான்.
‘மச்சான் டேய் முகுந்தன் பிரான்சில இருந்து வந்து நிக்கிறானாமெடாப்பா. நாளைக்கு பின்னேரம் அவன மீற் பண்ணப் போவமா?’
முகுந்தனை மீண்டும் சந்திப்பேனென நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. இப்போது எல்லாமே அவனுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ என்றுகூடத் தெரியாது. எந்த முகத்துடன் அவனைச் சென்று சந்திப்பது? உண்மைகள் தெரிந்திருந்தால் என்னைக் காண்கையில் அவனது எதிர்வினைகளை என்னால் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்குமா? மனதிற்குள் ஆயிரம் கேள்விகளுடன் துரோகம் புரிந்துவிட்டதான குற்ற உணர்ச்சியும் மீண்டும் வந்து குறுகுறுக்கத் தொடங்கியது.
‘இல்ல மச்சான். எனக்கு நாளைக்கு வேலை’.
‘என்னடா சனிக்கிழமையிலும் வேலையா?’
‘OT’ -யடாப்பா.
‘வேலைவேலையெண்டு இப்பிடி உழைச்சு என்னத்தை மச்சான் காணப்போறாய்?’
‘உனக்கென்னடாப்பா, நீ சொல்லுவ. அவனவனின்ரை கஷ்ரம் அவனவனுக்குத் தான் தெரியும். மூண்டு வருஷமாச்சு. இன்னும் வந்து சேர்ந்த காசே ஏஜென்சிக்காரனுக்கு; கட்டி முடிக்கேல்ல. உழைக்கிற காசெல்லாம் வட்டிகட்டத்தான் சரியாயிருக்கு’. ‘சரியடாப்பா அப்ப கொன்பிரன்சில விடுறன். மற்ற லைனில முகுந்தன் நிக்கிறான் கதை’.
நெஞ்சுக்குள் உண்டான நடுக்கத்தை மறைத்துக் கொண்டு,
‘முகுந்தன் டேய் எப்பிடியிருக்கிற’?
‘இருக்கிறன்ராப்பா. நீ எப்பிடி இருக்கிற. எப்பிடிப் போகுது கனடா எல்லாம்’?
‘ம்ம்ம்…. இக்கரைக்கு அக்கரை பச்சைதான். என்ன விசயம். திடீரெண்டு கனடாக்கு வந்திருக்கிறாய்’?
‘இல்ல மச்சான் தெரியாதே. வயசும் போகுது. அக்காதான் வரச் சொன்னவா. இஞ்சையொரு பிள்ளையைப் பாத்து வைச்சிருக்கெண்டு. போட்டோ பிடிச்சிருந்துது. அதுதான் நேரபாத்துப் கதைச்சுப்பழகி பிடிச்சிருந்தா கட்டுவமெண்டிட்டு வந்தனான்’.
‘அப்ப ஆனந்’?
தீ-யை வாய்க்குள் விழுங்கிக் கொண்டேன். என்னையே அறியாமல் வந்து விழுந்துவிட்ட வார்த்தைகள். முகுந்தன் என்றவுடன் ஆனந்தியும் சேர்ந்தே நினைவுக்கு வருவாள். ஆனால் இந்த இருவருக்கும் நான் செய்திருப்பது?
வாற செவ்வாய் வேலைக்கு லீவு போட்டு டொக்ரர் சூரியபாலனைப் போய்ப் பார்க்க வேணும். இல்லையெண்டா திரும்பவும் டிப்பிரஷன் வந்து வேலைக்கும் போகேலாம. ச்சே இவனை ஆரு இப்ப இஞ்சை வரச் சொன்னது?
அந்த வே… பற்றி என்னோட கதைக்காத மச்சான். அவள் இப்பை அங்க அடிசர… .தெரியுமா உனக்கு?
கைகள் நடுங்கி கைபேசி கீழே விழுந்தது. மனம் உடைந்து நொருங்கி சுக்கல்சுக்கலானதாய்.. குற்றவுணர்ச்சியில் மனம் குமையத் தொடங்கியது.
ஆனந்தி!
எங்களின் சின்ன வயதுச் சிநேகிதி. பாலகப் பருவத்திலிருந்தே ஒன்றாவே படித்து வந்தோம் ஆண்பெண் பேதமறியா பேதை பெதும்பைப் பருவங்களில் எங்களோடு சேர்ந்து விளையாடியவள். நாங்கள் மறவோன்களாக அவள் மங்கையானாள். அதுவரை ஆனந்தத் தித்திப்பாய் இருந்தவள் எனக்கு ஆனந்தத் தீயாய் மாறினாள். அவளின் மேல் இன்னவென்று புரியாத அதீத ஈர்ப்புகள் என்னுள் உருவாகத் தொடங்கின. ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரங்களில்கூட கரும்பலகையிலிருந்து என் நயனங்கள் நழுவி அவள் கூந்தலில் சென்று சிக்கெடுக்கத் தொடங்கின. எப்போதுமே நான் ஒருவித கிறக்கத்தில் திரிந்து கொண்டிருந்தேன். இதைப்பற்றி யாருடானவது கதைக்கவேண்டும் போலிருந்தது. என் நம்பிக்கைக்குரியவனாக முகுந்தனே இருந்தான். ஒரு நாள் இன்ரேர்வலுக்கு அவனைத் தனியே அழைத்துச் சென்றேன்.
‘மச்சான் நான் உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்’
‘சொல்லு மச்சான்’
ஏனோ தெரியவில்லை குரல் நடுங்கியது.
‘இல்ல மச்சான்… ஆ..னந்தி ல. லலவ்’
‘எப்பிடியடா கண்டு பிடிச்ச?’
‘எ…என்ன?’
‘நான் ஆனந்திய லவ் பண்ணுறன் எண்டு எப்பிடிக் கண்டு பிடிச்ச?’
என் இதயத்திலிருந்து எதையோ யாரோ பிய்த்தெறிவது போல உணர்ந்தேன். கண்களை உடைத்துக் கொண்டு பாய்வதற்குக் கண்ணீர் அருவிகள் துடித்தன. ஓவென்று கத்தி அழ வேண்டும் போலிருந்தது.
‘மச்சான் ஆனந்தி அந்தப் பக்கமாப் போறாள். நான் பிறகு உன்னோட கதைக்கிறன் என’.
அன்றைய இரவு முழுவதும் நித்திரையின்றி மனதைப் பிசைந்துகொண்டேயிருந்தது. கண்ணீரருவிகள் கன்னங்களில் கோடிழுத்துக் கொண்டேயிருந்தன. யாருடனும் கதைக்கப் பிடிக்காமல் சில நாட்கள் தனித்தே திரிந்தேன்.
‘நான் உனக்கு முதல்லேயே சொல்லேல்லையெண்டு கோபமா? சொறி மச்சான். நீதான் என்ரை லவ்வுக்கு கெல்ப் பண்ண வேணும்’
முகுந்தன் கேட்கையில் என்னால் மறுக்க முடியவில்லை.
சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள் ஆனந்தியிடம் சென்று நடுக்கத்துடன் முகுந்தனின் காதலைச் சொன்னேன்.
சிரித்தாள்.
‘நீங்க சும்மா தானே முகுந்தனைச் சொல்லுறீங்க. கிளாசில நீங்க என்னை அப்பிடிப் பாத்துக் கொண்டிருக்கிறது எனக்கும் தெரியும்’
‘இல்லை உண்மையாத் தான். முகுந்தன் தான் உங்களை லவ் பண்ணுறான்’
அவள் வதனம் சுருங்கிப் போவது தெரிந்தது.
‘நானும் ஏதோ நீங்க என்ன லவ் பண்ணுறீங்களாக்கும் என்டு நினைச்செல்லோ சும்மா இருந்தன். என்னால இப்ப லவ்வையெல்லாம் நினைச்சுப் பாக்கோலாது. எனக்குப் படிக்க வேணுமாமெண்டு முகுந்தனிட்டச் சொல்லுங்கோ’
அவள் சென்றுவிட எதுவும் புரியாமல் நான் திகைத்து நின்றேன்.
சிலமாதங்களிலேயே யாழ் கோட்டைக்கான போரினால் எங்கள் பகுதிகளிலும் யுத்தம் பரவ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கெனப் பிரிக்கப்பட்டோம்.
ஏறத்தாழ பத்து வருடங்களின் பின் 2002 இல் ஆனந்தியை எதிர்பாராத விதமாகக் கிளிநொச்சியில் சந்தித்தேன் முகுந்தனின் காதலியாக, முகுந்தனுடன். அவள் மல்லாவியில் இருப்பதாகவும் முகுந்தனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வந்ததாகவும் முகுந்தன் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். வேலை நிமித்தம் நான் எனது இருப்பிடத்தைக் கிளிநொச்சிக்கு மாற்றிக் கொண்டேன்
2006 இற்குப்பின்னர் சண்டைகள் உக்கிரமடைந்து தொலைபேசிப் பாவனைகள் சுருங்கிக்கொண்டுவர முகுந்தனுக்கும் ஆனந்திக்கும் தொடர்பாளனாய் நான் மாறிப் போனேன். ஆனந்தியின் தம்பி இயக்கத்தில் இணைக்கப்பட நோயாளிகளான பெற்றோரைப் போஷிக்கும் பொறுப்பு அவளின் தலையில் விழுந்தது. உள்ளுக்குள்ளேயே ஆழஊடுருவும் படைகளின் தாக்குதல்களால் உள்ளூர் போக்குவரத்துகள் ஆபத்தானவையாக மாற எமக்கிடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
கையில் இருந்தவை எல்லாம் இழந்து நெஞ்சில் வியாபித்திருந்த கனவுகளும் தொலைத்து, முள்ளிவாய்க்காலிலிருந்து சூனியமாகிப் போன மனதுடன் வெளியேற கால்கள் தயங்கிக் கொண்டிருந்த கணத்தில்,
‘அண்ணே நான் உங்களோட வரட்டா’
குரல் கேட்டுத் திரும்ப ஆனந்தி தன் தாயுடனும் இரு குழந்தைகளுடனும் நின்றிருந்தாள். அவளுக்கு இன்னும் நான் யார் என்பது புரிந்திருக்கவில்லை. நான் யார் என்பதை அறிய வேண்டிய தேவையும் அவளிடம் காணப்பட்டதாய்த் தெரியவில்லை. தயங்கி நின்றதையே சம்மதமாக எடுத்தவள், என்னுடன் தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டாள். அப்போதுதான் மற்றையவர்களைக் கவனித்தேன் எல்லோரும் குடும்பமாய் இணைந்தே சென்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே ஷெல் வீச்சுகளினாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் கொல்லப்பட்ட உடல்கள் சிதறிக்கிடக்க,
‘கொஞ்சம் பொறுங்கோ அண்ணே வாறன்’
சற்றுத் தள்ளி ஓடியவள் அங்கே கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தைதப்பிரட்டி எதையோ எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டாள். பின் நெற்றியைத் தொட்டு தன் நெற்றியில் பூசிக் கொண்டாள். ஏதும் புரிபடாமல் நின்றேன்.
‘அண்ணை குறை நினைக்காதீங்கோ. தனியப் போனா ஆமிக்காரர் ஏதுஞ்செய்து போடுவாங்கள். சேர்ந்து போனாலும் விசாரிப்பாங்கள்.. அதுதான் அந்தத் தாலியையும் எடுத்து நானே போட்டிட்டு குங்குமப் பொட்டையும் எடுத்து வைச்சுக் கொண்டு வாறன். அவங்கள் கேட்டால் என்னை உங்கட மனிசியெண்டு சொல்லுங்கோ. என்ர பேர்..’
‘தெரியும், ஆனந்தி’
‘உங்களுக்கு எப்பிடி என்னைத் தெரியும்’ என்றவாறே என்னை முதன்முதலாக ஏறிட்டுப் பார்த்தாள்.
‘ஓ! ஜேந்தன் நீங்களா?’
தலையைக் குனிந்து கொண்டாள்.
‘சித்தி எனக்குக் கால் நோகுது. என்னைத் தூக்குங்கோ’ என்றது அருகில் இருந்த பெண் குழந்தைகளில் ஒன்று. அதைத் தூக்கியவாறே
‘நீங்க ரெண்டு பேரும் இனி என்ன சித்தி எண்டு சொல்லக்கூடாது. அம்மா எண்டுதான் கூப்பிட வேணும் சரியா. ஆமிக்காரங்கள் கேட்டா இவர்தான் அப்பா எண்டு சொல்ல வேணும். இல்லையெண்டா ஆமிக்காரங்கள் சித்தியை ஏதும் செய்து போடுவாங்கள் சரியா?’
அந்த இரு குழந்தைகளுமே தலையை ஆட்டின. எனக்கும் ஏதோ புரிந்தது போலிருந்தது. அது எனது பாதுகாப்பிற்கும் தேவையாயிருந்தது.
முட்கம்பி முகாமிலும் நாம் கணவன் மனைவியாகவே அறியப்பட்டாலும் நாங்கள் நாங்களாகவே இருந்தோம் என்பதே உண்மை. ஆனால் அதை இந்த சமூகம் எப்படிப் பார்க்கப்போகின்றது என்பதைப் பற்றிய சிந்தனை அப்போது இருந்திருக்கவில்லை. ஒருமாதிரி விடுவிக்கப்பட அடிச்சுப்பிடிச்சு ஒரு ஏஜென்சிக்காரனைப் பிடிச்சு அங்கை இஞ்சை அலைஞ்சு கனாடாவிற்கு வந்து சேர்ந்து நிம்மதிப்பெருமூச்சும் விட்டபின்தான் மனதிற்குள் குற்றவுணர்ச்சி உறுத்தத் தொடங்கியது.
‘எங்கள விட்டிட்டுப் போகாதீங்கப்பா’ என்று கெஞ்சிய அந்தவிரு குழந்தைகளையோ ‘நீயும் எங்களோடையே இருந்தாக் கொஞ்சமாவது தெம்பாயிருக்கும் மோன. நீயும் இல்லையெண்டா நாங்க என்னத்தைச் செய்யப்போறமோ?’ என்று கூறிக்கண்ணீர்விட்ட ஆனந்தியின் அம்மாவையோ. எதுவுமே பேசாமல் முகத்தை மறைத்துக் கொண்டு தனித்திருந்து இரவுகளில் விம்மிய ஆனந்தியையோ என்னால் மறக்க முடியவில்லை. ஆனந்தியை அணைத்து அமைதிப்படுத்தி அவர்களுடன் தங்கிவிடவே மனம் விரும்பினாலும் அப்படிச் செய்வது முகுந்தனுக்குச் செய்யும் மிகப்பெரிய நம்பிக்கைத்துரோகமாக அமைந்து விடலாம் என்பதால் என்மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்
விடுதலையாகி வவுனியா வந்த அன்று முகுந்தனைத் தொலைபேசியில் அழைத்து, ‘ஆனந்தி’ என்று தொடங்கவே ‘கேள்விப்பட்டனான் மச்சான், நான் இப்ப வேலையில நிக்கிறன் பிறகு கதைக்கிறன் என்று தொடர்பைத் துண்டித்தவன் அதன் பிறகு எந்தவொரு அழைப்பிற்கும் பதிலளிக்கவில்லை. அவன் என்னத்தைக் கேள்விப்பட்டானோவென்றும் எனக்குத் தெரியாது.
மீண்டும் கைபேசி அழைக்கவே,
என்ன மச்சான் போனைக் கட்பண்ணீற்ற?’
சொரூபன் கேட்க,
‘இல்லையடா. கவரேஜ் கொஞ்சம் குறைவாயிருக்கு அதுதான். சொல்லு’
‘அவன் முகுந்தன் வைச்சிற்றான்ரா. அவனுக்கு நீ ஆனந்தியைப் பற்றிக் கேட்டது பிடிக்கேல்லை. அவள் எப்பையோ இவனுக்குத் தெரியாம கல்யாணம் கட்டி ரெண்டு பெம்பிளைப் பிள்ளைகளும் இருக்காம். அதோட இப்ப அவள் அங்கை அப்பிடி இப்பிடித்தானாம். நீகூட அதை அவனுக்குச் சொல்லேல்லை எண்டு உன்னோடையும் சரியான கோபம். நான் தான் கல்யாண வீட்டுக்கு உனக்கும் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினனான். வாற சனியை விட்டு அடுத்த சனி அவனுக்கு கல்யாணமடா’
மண்டை விறைக்கத் தொடங்கியது.