வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்
வேலணை மேற்கு சைவப் பாரம்பரியத்தில் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. வேலணை மேற்கு பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம் இந்த கிராமத்தின் இதயம் போன்றது. இந்த ஆலய சூழலில் பண்டிதர்கள், புராணிகர்கள், புலவர்கள் , இலக்கிய ஆராய்ச்சி விற்பன்னர்கள் வாழ்ந்தார்கள். கோவிலில் கூடி பெரிய புராணம், கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம் வாசித்து உரை சொல்கின்ற நீண்ட பண்பாட்டுபாரம்பரியம் இங்கு வளர்ந்திருந்தது.
இவ்வூரில் கந்தப்பு உபாத்தியாயர், பொன்னையா உபாத்தியாயர், சட்டம்பியார், முருகேசு உபாத் தியாயர், நாகலிங்க உபாத்தியாயர், இராஜா உபாத்தியாயர், தம்பு உபாத்தியாயர் இவர்களின் வரிசையில் பிற்காலத்தில் முத்து உபாத்தியாயர், சதாசிவம் விதானையார், அப்பாத்துரை உபாத்தியாயர் (பேரம்பல உபாத்தியாயர்) வே. பசுபதிப்பிள்ளை உபாத்தியாயர், ச. மகாலிங்க விதானையார் ஆகியோர் அவ்வப்போது புராணபடன குழுவில் தமது பங்கைச் செலுத்தி சைவமும், தமிழும் வளர பங்காற்றினார்கள்.
இவர்களின் பாரம்பரியத்தில் தோற்றம் பெற்ற ஒரு பாடசாலையாக நடராஜா வித் தியாலயம் விளங்கியது. நாவலர் மாணவர் அமரர் கந்தப்பர் ஸ்தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலை அமரர் இராஜா உபாத்தியாயர் (செங்கமலையர் கனகசபாபதிப்பிள்ளை) அவர்கள் ஸ்தாபித்த நடராஜா வித்தியாசாலை, வேலணை மத்திய கல்லூரி ஆகியவை வேலணை மேற்கு பகுதியில் சிறப்பாக கல்விப்பணியாற்றி வருகின்றன.