காத்திருக்கும் கண்ணகிகளும் அகலிகைகளும்
ஏற்கனவே உன் கவிதைகளெனும் தூண்டிலில் இந்த மீன் மாட்டிவிட்டதே கண்ணா? மீண்டுமெதற்காய் வலைவீசுகின்றாய்?”
தூண்டில் வீசுகின்ற
மீன்கள்!
உன் விழிகள்.
செல்லமாய்ச் சிணுங்கியவாறே தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு, காத்திருந்த அவன் கைவலைக்குள் விரும்பிப்போய் விழுந்தாள் அவள்.
“அதென்ன கண்ணா! எப்போதுமே உனக்கென் கண்மேல்தான் கண்ணா?” செல்லமாய் ஊடினாள் .
“கண்கண்டார் கண்ணே கண்டாரடி கிளியே! அதற்கும் கீழே அத்துமீறினால், ஆசைகள் அவிழலாம், ஆடைகள் நழுவலாம். எம்நிலையும் வழுவலாம். ஏனடி வீண்வம்பு?கண்டுண்டிலோம் பொறுத்திருப்போம். காலம் வரும்வரை காத்திருப்போமடி”
“சரிசரி என் கண்ணையே நீபாரு கண்ணா. அதையே நீபாடு கண்ணா”
குளம்முழுதும் ஒருமீனாய்
தளும்புமிரு குளங்கள்!
மூழ்கவா நீந்தவா?
“நீ எங்கே வரச்சொன்னாலும் நான் வந்து விடுகிறேனடா கண்ணா”
“என்னதூஉஉஉ?”
நீதானே கண்ணா, என்னை மூழ்க வா, நீந்த வா என்று இருமுறை வரச்சொன்னாய்”
“ஆகா! அருமை அருமை. நான் உன் விழியாழிகளுக்குள் மூழ்கட்டுமா இல்லை நீந்தட்டுமா என்று கேட்டால், உன்நாவில் தமிழ் வந்து வளைந்து விளையாடுகிறதே என் கண்மணியே”
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்றால், இந்தக் கவிமன்னன் காதலி நாவில் தமிழ் கொஞ்சம் வளையாதோ? நானும் கொஞ்சம் கவிதை சொல்லவா?”
“நீயே ஒரு கவிதை இப்போ நீ ஒரு கவி தை.”
உருவற்ற அநங்கனின்
கரும்பு வில்லோ? – உன்
அரும்பு மீசை?
எப்படியிருக்கிறது இக்கன்னியின் கன்னிக்கவிதை?
அஞ்சுகமே அடியென் அருஞ்சுகமே – எனைக்
கொஞ்சுவென உனைக் கெஞ்சுவனே
கண்நகைக்கும் அருங் கண்ணகியே
பெண்பகைக்கும் நீ பெருஞ்சகியே!
உன்நெஞ்சமடி அதுவென் மஞ்சமடி -நான்
உன்தஞ்சமடி நீயென் வஞ்சியடி
“கொல்லாதேடா கொலைகாரா” அவன் மார்பில் தலைசாய்த்து மோகமயத்தில் கிறங்கினாள். அவன் இதழ்களெனும் இருமலர்கள் அவள் விழிவண்டுகளை மொய்த்தன. அவன் நயனங்களைத் துளைக்கும் நோக்குடையவாய் துகிலுக்குள் அவள் நகில்கள். தானாகத் தாழ்ந்த விழிகளை பிடுங்கியெடுத்து சூல்கொண்ட கார்முகிலென திரண்டிருந்த அவள் கூந்தலில் சூடினான்.
அகில் மணக்குமுன் கூந்தல்
அதில் மயங்குமென் மனது
அய்யோ கொடுமையடி!
குறுநகை விழியாளே!
குறுகுறுத்த விழியாலே
எனைப் படித்தவளே!
படிக்கவா நானுமோர்
நல்லதொரு குறுந்தொகையை?
கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே (குறுந்தொகை -2)
அடுப்பில் வைத்த சிரட்டை மூசியெரிகையில் உண்டாகும் சீறுமொலியும் அதைத் தொடர்ந்தெழுந்த கூய்ய்ய்ங்ங்ங்………….. எனும் சத்தமும். கிபிர் மிகையொலி விமானங்கள் இரண்டு அருகில் எங்கோ குண்டுவீச தாழப் பறந்துவருவதை உணர்த்திற்று.
கான யானை கைவிடு பசுங்களைமீன் எறி தூண்டிலின் நிவக்கும்.. (குறுந்தொகை -54 இல் இருந்து)
சட்டென்று பிரிந்து வீழ்ந்து நிலத்தோடு படுத்துப் பதுங்கினார்கள்.
மதயானைகள் புகுந்த மூங்கிற்காடாயானது அருகிலிருந்த நகரம். அவனும் அவளும் அவரவர்வீடு நோக்கி விரைந்தார்கள். சில வாரங்களிலேயே ஊர்முழுதுமே வேருடன் பிடுங்கி வீசப்பட்டது.
1998
“யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்து ரெண்டு வருசமாச்சு. ஆராரு இப்ப எங்கெங்கை இருக்கினமோ? சும்மா அவனையே நினைச்சுக் கொண்டிருக்காம அடுத்த அலுவலைப் பார்க்கவேணும் நகி. அம்மா சொல்லுறா, கனடாவில இருக்கிற மாப்பிள்ளைக்கு, உன்ரை போட்டோவ ஆற்றையோ கலியாண வீட்டு அல்பத்தில பாத்திற்று பிடிச்சுப்போய்தான் கேட்டு வந்தவையாம். இது உனக்கு நல்ல ஒரு சான்ஸ். விட்டிராத”
“சும்மா லூசுத்தனமாக் கதைக்காதை”
“நீதான் விசரி மாதிரிக் கதைக்கிறாய். சும்மா இந்தச் செக்பொயின்ருகளுக்கையும் கேர்பியூக்களுக்கையும் (ஊரடங்குச்சட்டம்) கிடந்து கஷ்ரப்படாம அங்க கனடாக்குப் போனா எவ்வளவு சந்தோஷமா இருக்கலாம் தெரியுமா? அதுமட்டுமில்லை கொஞ்சக் காலத்திலயே உன்ரை அப்பா அம்மாவையையும் ஸ்பொன்சர் பண்ணீரலாம். அதுக்குப்பிறகு நீங்க எல்லாருமே அங்க சந்தோஷமா இருக்கலாம் தானே. இஞ்சை கிருஷாந்தி, ரஜினி ஆக்களுக்கு நடந்த கதை தெரியும் தானே. பிறகேன் யோசிக்கிறாய்”?
“அந்தப் கதைகளையெல்லாம் இனி என்னோடை கதைக்காதை. எனக்கு அவனைப்பற்றி நல்லாத் தெரியும். அவன் எப்பிடியும் என்ன கொன்ராக்ற் பண்ணுவான். அதுவரைக்கும் நான் அவனுக்காகக் காத்திருப்பன்.”
“நீயென்ன சரியான லூசா? அவன் உயிரோட இருக்கிறானோ எண்டுகூடத் தெரியாது. அப்படி எங்கையாலும் இருந்திருந்தா உன்ரை இந்த விலாசத்துக்கு ஒருகடிதமாவது போட்டுப் பாத்திருக்கலாம் தானே?
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரளவின்றே – சாரல்கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டுபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்தொகை -3)
“இதுக்குத்தான் நான் அப்பவே படிச்சுப் படிச்சுச் சொன்னனான் ஏ.எல்லில கொமர்ஸ்ஸைப் படியெண்டு. கேட்டாத்தானே. இப்பபார் ஆர்ட்ஸ் பக்கல்ரிக்குள்ள போய் அழிஞ்சுபோனதுதான் மிச்சம். வேலையும் எடுக்கேலாது…”
“கொமர்ஸ் படிச்சாப்போல உனக்கென்ன இப்ப அரசாங்க வேலையா கிடைச்சிருக்கு?”
“அடுத்த மாதம் வாற “லங்கா முடித” கப்பலில நான் கொழும்புக்குப் போயிருவன். அங்க பிறைவேற் கம்பனிகளில அரசாங்கச் சம்பளத்திலும் விட கூடச் சம்பளம். நீ சும்மா அவனையே நினைச்சுக் கொண்டு உன்ரை வாழ்க்கைய வீணாக்கிப்போடாத. அதமட்டும்தான் என்னால சொல்லேலும். நான் வெளிக்கிடுறன். எனக்கு பயண அலுவல்கள் நிறையக் கிடக்கு”
அவன் வாருவானா?
கன்று முண்ணாது கலத்தினும் படாதுநல்ஆன் தீம்பால் நிலத்துஉக்கா அங்குஎனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குல் என்மாமைக் கவினே. (குறுந்தொகை 27)
2004
வீட்டுக்குள்ள ஒருத்தரையும் காணேல்லை. வீடெல்லாம் திறந்து கிடக்கு, நான் சரியான விலாசத்துக்குத்தான் வந்திருக்கிறனோ எண்டும் தெரியுதில்லை. குசினிப் புகட்டுக்குள்ளால புகை வருகுது. இவள் உள்ளுக்குள்ளதான் இருக்கிறாள் போல. வீட்டுக்காரர்… வீட்டுக்காரர்….”
“ஆரது? நான் இஞ்ச குசினிக்குள்ள அலுவலா நிக்கிறன். நீங்க உள்ளுக்குள்ள வாங்கோ . . . அடீஇஇ நீயா! எப்பயடி கொழும்பால வந்தனீ? எப்படிப் பயணமெல்லாம்?. யாழ்ப்பாணத்திலயிருந்து கப்பலில கொழும்புக்குப் போனனீ. இப்ப பஸ்ஸில கிளிநொச்சிக்கு என்னைத்தேடி வந்திருக்கிறாய் என? என்ன மாதிரி ஓமந்தையில செக்கிங் பிரச்சினைகளொண்டும் இருக்கேல்லையா?”
“அதெல்லாம் ஒண்டும் பெரிய பிரச்சனையில்லை. அதுசரி கல்லயாணமெல்லாம் முடிஞ்சுதெண்டு கேள்விப்பட்டன். எங்கை ஆளைக் காணேல்ல. ஆராள்? என்ன செய்கிறேர்? முந்தியெண்டா குசினிப்பக்கமே எட்டிப் பாக்காத நீ, இப்ப குசினிக்குள்ள அறம்புறமாச் சமைச்சுக்கொண்டு நிக்கிறாய். நான் வருவனெண்டும் உனக்குத் தெரியாது. ஆருக்கு இப்பிடி விசேசமாய்ச் சமைக்கிறாய்?”
“கேள்வியெல்லாம் கேட்டு முடிஞ்சுதோ? ஏன் உனக்கு அவரைத் தெரியாதா? அவர் உயிரோட இருக்கிறேரா இல்லையோ எண்டெல்லாம் என்னை நக்கலடிச்சாய். இன்னும் கொஞ்ச நேரத்தில மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திருவார். இரு சொல்லுறன் அவரிட்ட”
“வாவ்! உண்மையாவாடி? ஐ ஆம் சோ ஹப்பீடி. எங்கையாம் இருந்தவர்?”
“அவரே வருவேர். நீ அவரிட்டையே கேட்டுக் கொள்ளு. உன்னோட கதைச்சுகதைச்சு நான் சமையலைக் கவனிக்காம விட்டிட்டன்”.
தன் சேலைத் தலைப்பால் அடுப்படியிலிருந்த சட்டியைப் பிடித்து இறக்கும் அவளைக் காண அவள் தோழிக்கு வியப்பாயிருந்தது.
“என்னெடி அப்பிடி ஆவெண்டு பாக்கிறாய்?”
“இல்ல முந்தியெண்டா உன்ர உடுப்பில ஒரு சின்ன ஊத்தைபட்டாக்கூட கத்திக் கூப்பாடு போடுவ. இப்ப கரிச்சட்டியையே சீலைத்தலைப்பால பிடிச்சு இறக்கிற. அதுதான் நான் பாக்கிறது கனவா இல்ல நனவா எண்டு யோசிக்கிறன்.”
“இல்லையடி குழம்பு நல்ல பதமா வந்திற்றுது. இதுக்குமேல வத்த விட்டா அவருக்குப் பிடிக்காது அதுதான். சீலையைப் பிறகும் தோச்சுக் கொள்ளலாம் தானே”
“அம்மா தாயே! உன்னை அடிச்சுக்க யாராலுமே முடியாதும்மா”
“அடி போடி. தமிழைப் படிக்காத உனக்கெல்லாம் இது எங்க விளங்கப்போகுது?”
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇகுவளை உண்கண் குய்ப்புகை கழுமத்தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்“இனிது” எனக் கணவன் உண்டலின்நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே (குறுந்தொகை 167)
2017
கண்முன்னே கட்டிய காதல் கணவனைக் கைதாக்கிக் கயவர் கொண்டுசெல்ல கையறுநிலையில் கலங்கி நின்று கதறியவள் அவள். காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு நடாத்தப்படுகின்ற எல்லாப் போராட்டங்களிலும் அவளும் கண்ணீர் உகுக்கக் கால்கள் தேயக் கலந்து கொள்கிறாள். அவனில்லா வீட்டில் அவள் நுழைய முடியாத அளவிற்கு அவன் ஞாபகங்கள் அங்கிங்கெனாது எங்கும் நீக்கமற வியாபித்துப் பரவியிருந்தன. களைத்து வந்த, அவள் தளிர் மேனி ஒரு மூலையில் குறங்கிக் கிடக்கிறது. திருமணத்தின் போது அவளைத் தழுவியவாறு நின்று அவன் எடுத்து படம் அவள் மனதை வதைக்கிறது.
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,முரண் மிகு சிறப்பின் செல்வனுடன் நிலைஇயஉரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிராமா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனிசெவ் விரல் கடைக்கண் சேர்த்தி, சில தெறியாபுலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவை (நெடுநல்வாடை 161 -166)
தவமாய்த் தவமிருந்து வற்றாப்பளை கண்ணகை அம்மன் அருளால் பிறந்த பெண்ணாயிற்றே அவள். அந்தத் தெய்வத்தின் அருள்கூடவா அவளை விட்டுப் போயிற்று? கண்ணகி என்று பெயர் வைத்ததே தப்போ? சிலப்பதிகாரக் கண்ணகியின் காத்திருப்பில் கோவலன். மாதவியிடமிருந்து மீண்டு வந்தானே. சங்ககாலக் கண்ணகியின் பேகனை வம்பப் பரத்தையரிடமிருந்த மீட்டுப் பாணர்கள் கொடுத்தார்களே. இந்தக் கண்ணகியின் கண்ணாளனை வஞ்சகரிடமிருந்து யார் மீட்டுத் தருவாரோ?
இன்னாதுஇகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்முலையகம் நனைப்ப விம்மிகுழல் இணைவதுபோல் அழுதனள் (புறநானூறு 143 இல் இருந்து)
கயவர் கொண்டு சென்ற தம் காதற்கணவர்களின் வருகைக்காய்க் காத்திருக்கும் பலநூற்றுக்கணக்கான கண்ணகிகளில் இவளும் ஒருத்தி, இவளாலும் உறங்க முடிவதில்லை.
நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சேபுன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கினிய செய்தநங் காதலர் (குறுந்தொகை 202 இல் இருந்து)காணாமல் ஆனதால் நோமென் நெஞ்சே
எழுந்து கால்போன போக்கிலே நடந்து போகிறாள் அப்பேதை.
ஐயோ! யாராவது அவளிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன். பாதங்களைக் கொஞ்சம் பார்த்து வைக்குமாறு. இராமனுக்காய் இப்போதும் காத்திருக்கும் அகலிகைகளில் ஒருத்தி அவளை அரவணைத்துக்கொள்ளக்கூடும்.
இராமனின் பாதத் தீண்டலுக்காய்இராப்பகலாய்க் காத்திருக்கிறார்கள்மிதிவெடி அகலிகைகள்!
*************
உசாவல்: குறுந்தொகை, புறநானூறு, நெடுநல்வாடை