வேலணை சரஸ்வதி வித்தியாசாலை
திருமதி. நா. பொன்னுத்துரை – ஆசிரியை
ஐரோப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே வேலணைக் கிராமம் கல்வி, பண்பாடு, கலாசாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்ததாக பல சான்றுகள் மூலம் அறியப்படுகின்றது. அக்காலத்தில் ஆலயங்களில் ஆன்மீகக் கல்வியும், எண், மொழி, இலக்கியம் ஆகிய சமுதாய மேம்பாட்டிற்கான கல்வி திண்ணைப் பள்ளிகளிலும், குருகுல முறையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளன. எனினும் முறைசார்ந்த பாடசாலைகள் இருந்திருக்கவில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊர்காவற்றுறையில் நிறுவப்பட்ட புனித அந்தோனியார் கல்லூரியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட மத்திய கல்லூரியிலும், வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் வசதிபடைத்த ஒருசில குடும்பத்தவர்கள் மட்டும் ஆங்கிலக் கல்வியைப் பெற்று எமது நாட்டிலும், மலாயா நாட்டிலும் அரச தொழில் பெற்று தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலணை சாட்டியில் றோமன் கத்தோலிக்க பாடசாலையும், வேலணை வங்களாவடியில் அமெரிக்க மிஷன் பாடசாலையும் நிறுவப்பட்டு முறைசார்ந்த கல்வி போதிக்கப்பட்டது. இதனால் வேலணைக் கிராமச் சிறார்களுக்கு முறை சார்ந்த பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்புக் கிட்டிய போதும் இப் பாடசாலைகள் தமது சமயக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்ததுடன் தமது மதத்தைத் தழுவுவோருக்கு பலசலுகைகள் வழங்கி மதமாற்றத்தை ஊக்குவித்தனர். ஆனால் மிக இறுக்கமான வைதீக பாரம்பரியத்தைக் கொண்ட வேலணை மக்கள் மாற்று மதத்தாரின் வஞ்சகப் பொறிக்குள் சிக்கிவிடவில்லை.