வேலணை சரஸ்வதி வித்தியாசாலை
அவர்களில் அந்நாள் வேலணை தபால் அதிபர் திரு.வைத்திலிங்கம், திரு. மூத்ததம்பிசதாசிவம் (குழந்தைவேலு) சபாபதி நாகலிங்கம் (கிளாக்கர் நாகலிங்கம்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். திரு.நாகலிங்கம் அவர்கள் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்வதிலும், தொழிலாளர்களை ஊக்குவிப்பதிலும் திரு.சதாசிவம் கட்டுமானத்திற்குத் தேவையான கல்,மணல், மரங்கள் ஆகியவற்றை இலவசமாக பெற்றுக்கொடுத்தது மட்டுமன்றி தாமும் இலவசமாக பனைமரங்கள் வழங்கியும் தேவையான கட்டுமான பொருட்களை பெற்றுக் கொடுத்தும் கட்டிடம் முழுமை பெற பங்களிப்பு நல்கினார். பாடசாலைக் கூரைக்குத் தேவையான ஓடுகள் இந்தியாவில் இருந்து திரு. சோமசுந்தரம் அவர்களின் மரக்கலத்தில் கொண்டு வரப்பட்டது.
ஸ்தாபகரினதும் அவருடன் இணைந்து செயலாற்றிய நான்கு பெருமக்களினதும் தளரா முயற்சியினால் 1926 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் “ப” வடிவிலான பாடசாலைக் கட்டடம் முழுமையாக நிறைவு பெற்றது மட்டுமன்றி பாடசாலைக்குத் தேவையான அனைத்துத் தளபாடங்களும் செய்யப்பட்டு பூரண வளம்மிக்க பாடசாலையாக உருவாக்கப்பட்டது. பாடசாலைக் கட்டட அமைப்பிலும் தளபாடங்கள் உருவாக்கத்திலும் வேலணைத் தச்சுத் தொழிலாளர்கள் திடகாத்திரமான பங்களிப்பு வழங்கி உதவினர். அக்காலத்தில் அத்தகையதொரு வளம்மிக்க பாடசாலை வேலணைக் கிராமத்திலோ அன்றி அயற் கிராமங்களிலோ இருந்திருக்கவில்லை. வேலணை மக்களின் அறிவுக்கண்ணைத் திறக்க வைத்த இவ் அறிவாலயம் 1927 ஆம் ஆண்டுத் தைப்பூசத் திருநாளில் வேலணை சரஸ்வதி வித்தியாலயம் என நாமஞ்சூட்டப்பட்டு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே பாடசாலையில் ஆரம்ப வகுப்புத் தொடக்கம் prelim வகுப்புவரை கல்வி போதிக்கப்பட்டு வந்தது. prelim வகுப்பு இரத்துச் செய்யப்பட ஆரம்ப வகுப்பு தொடக்கம் S.S.C வகுப்புவரை வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் நடுப்பகுதியில் வேலணை மத்திய கல்லூரி அதிக எண்ணிக்கையான மாணவர்களை உள்வாங்கக்கூடிய வளம் பெற்றபோது எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் குறைக்கப்பட்டு 1972ஆம் ஆண்டுக் கல்வி மறுசீரமைப்பு வரை கனிஸ்ட மகாவித்தியாலய தரத்தில் இயங்கி வந்தது. 1975ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்ப வகுப்பு முதல் G.C.E. O/L வகுப்புவரையுள்ள மகாவித்தியாலயமாக இயங்கி வருகின்றது.