வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம்

வேலணை மத்திய கல்லூரி என்ற பெயருடன் வலிகாமம் மேற்குப் பகுதிக்கு அறிவொளி காலவந்த குழந்தை 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதி நாவலர் பரம்பரையினால் உருவாக்கிப் பரிபாலிக்கப்பட்டு வந்த சைவப்பிரகாசத்தில் தீவுப்பகுதி மக்கள் செய்த தவப்பயனாய் உதித்தது. இதன் பிதா 54 தொகுதிகளுக்கும் தொகுதிக் கொன்றாக மத்திய கல்லூரியை விதந்துரைத்த இலங்கை வரலாற்றின் மிகச்சிறந்த கல்வி மந்திரியாகவிருந்த சேர் W.W. கன்னங்கரா ஆவர்.C.W.W.Kannangara

வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்றைய வலிமேற்கு பிரதிநிதி, சட்டசபைச் சபாநாயகர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் வழிகாட்டலில் அன்றைய வேலணைக் கிராமச்சங்கத் தலைவர் திரு. இ. மருதையினார் அவர்கள் மக்கள் கொடுத்துதவிய பணத்துடன் கொட்டில் போடுவித்து கல்லூரி இயங்க ஆவன செய்தார். சிறப்பான அதிபர் ஒருவரைப் பெற கல்வி இலாகாவில் வேலை செய்த தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உறுதுணையானார்.

A.K.Kandiahதிரு. A.K. கந்தையா முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். 1945 நவம்பரில் 6 ஆம் வகுப்பில் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்கத் தொடங்கி 1950 டிசம்பரில் நடந்த S.S.C சோதனையில் நூறு வீத சித்தியும் பெற்ற பெருமையில் பெரும்பங்கு அதிபரையே சாரும். பாடசாலையிலே மாலை 6 மணிவரை தங்கி மாணவர் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். அவர் படிப்பித்த ஆங்கில இலக்கியமும், கணிதமும் இன்று நினைத்தாலும் இனிக்கும். அவருக்கு உறுதுணையாக சிறப்பான ஆசிரியர் குழாமும் அமைந்தது. மூன்று இல்லங்களுக்கிடையே – கன்னங்கரா, துரைச்சுவாமி, சாண்டிமன் இல்லங்கள் – விளையாட்டு, தோட்டவேலை என பலதரப்பட்ட துறைகளில் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன. இத்துடன் சாரணீய இயக்கமும் விருத்தியுற்றது.

“கல்லூரியைத் திறந்து வைத்தவர் கல்வி மந்திரி கன்னங்கரா அவர்களேயாவார். ஒரு பெருவிழாவாக என்றும் நினைவுகூரத்தக்கதாக அது அமைந்தது”
கல்லூரியைத் திறந்து வைத்தவர் கல்வி மந்திரி கன்னங்கரா அவர்களேயாவார். ஒரு பெருவிழாவாக என்றும் நினைவுகூரத்தக்கதாக அது அமைந்தது. இவ்வாரம்ப காலத்தில் ஊர்காவற்றுறை, மண்கும்பான், கரம்பொன், சுருவில் போன்ற தூர இடங்களிலிருந்து மாணவ மாணவியர் நடந்து வந்தே கற்றனர். இக்காலப் பகுதியிலேயே புலமைப் பரிசில் திட்டமும் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்திற்கமைய, குறித்தவொரு தொகுதி மாணவர் அந்தத் தொகுதியிலுள்ள மத்திய கல்லூரியிலேயே படிக்க வேண்டும். எனவே, தூர இடங்களிலிருந்து கல்விகற்க வரும் மாணவர்கள் தங்கிப்யிருப்பதற்கு ஏதுவாக, இரண்டு வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி என்பன அமைக்கப்பட்டன. முதலாவது விடுதி மேற்பார்வையாளராக திருமதி சபாரட்ணம் அவர்கள் கடமையாற்றினார். முதலாவது உதவி அதிபராக செல்வி L.P. முருகேசு அவர்களும் முதலாவது காவலாளியாக திரு. இராசையா அவர்களும் கடமையாற்றினர். எமது கல்லூரியின் முதலாவது மாணவன் திரு. M. லிங்கப்பிள்ளை ஆவார்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!