Velanai Central College
இவரைத் தொடர்ந்து வந்தவர் திரு. சிவசிதம்பரம் அவர்கள். இரு வருடங்கள் இங்கு அதிபர் பதவி வகித்தவர். கண்டிப்பானவர், கொள்கைவழி நடப்பவர். சிறப்பான விஞ்ஞான ஆசிரியரும்கூட. இவரது காலப்பகுதியிலும் பல்கலைக் கழகத்திற்கு மாணவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டனர். அல்லாதோருக்கும் உத்தியோக வாய்ப்புக்கள் கிடைத்தன. இவரைத் தொடர்ந்து திரு. J.S. அரியரட்ணம் அவர்கள் 1967 – 1971 வரை அதிபராக சிறப்பாக செயலாற்றினார். பாடசாலை முன்னேற பல வழிகளிலும் முயற்சியெடுத்துக் கொண்டார். O.L, A.L வகுப்புக்களில் சிறப்பான பெறுபேறுகள் ஏற்பட்டன. பாடசாலை வெளிளிவிழாக் கொண்டாட பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது கைகூடவில்லை என்ற ஆதங்கத்துடன் மாற்றலாகி அவர் செல்ல, வேலணையைச்சேர்ந்த திரு. ப. பொன்னுத்துரை அவர்கள் குறுகிய காலம் அதிபராகக் கடமையாற்றினார்.
இவரைத்தொடர்ந்து திரு. C. இராஜநாயகம் அவர்கள் 1972 இல் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். தீவுப்பகுதியைச் சேர்ந்தவர். இவரது காலப்பகுதியும் பாடசாலை வரலாற்றில் ஒரு சிறப்பான காலமாகும். கலை, விஞ்ஞானப் பகுதிகள் புத்தூக்கம் பெற்றன. பாடசாலை மைதானம் மாணவர் தேவைக்குப் போதுமானதாகக் காணப்படாமையினால், ஆண்கள் விடுதிக்கு முன்புள்ள காணியை ஒழுங்கான ஒரு விளையாட்டு மைதானமாக உருவாக்குவதற்கு பணம் அதிகம் தேவைப்பட்டது. இதற்கு ஒரு கலைவிழா சிறப்பாக நடாத்தி பணமும் சேர்க்கப்பட்டது. இவரும் பதவியுயர்வுடன் மாற்றலாகிச் செல்ல திரு. தியாகராசா அவர்கள் மிகக் குறுகிய காலம் அதிபர் பதவியை ஏற்றார். இவரைத் தொடர்ந்து வந்த அதிபர் வேலணை சேக்ஷ்பியர் நாகலிங்கத்தின் மருகர் திரு. C. குணபாலசிங்கம் ஆவார்.
இவரும் பாடசாலையை பல வழிகளிலும் முன்னேற்ற அயராது உழைத்தார். இவரது காலப்பகுதியில் பொறியியல் துறை மற்றும் பல் மருத்துவத்துறை ஆகியவற்றிற்கும் மாணவர் செல்லத் தொடங்கினர். புதிய நூலகம் திறக்கப்பட்டது. புதிய விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் கனவும் நனவாகியது. விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக அமைய இத்திடல் சிரமதானப் பணி மூலம் செப்பனிடப்பட்டது. சாரணீய இயக்கம் இதில் முக்கிய பங்கேற்றுக்கொண்டது. இக்காலப் பகுதியிலேயே பாடசாலையின் பெயரும் மாற்றம் பெற்றது.




