முற்றத்து மல்லிகையாகிய ஈழத்துச் சதன் என்னும் சோமக்கிளி
சமீபத்தில் கதியால் அவர்களி்ன் கிடுகுவேலியில், பல்குரல் கலைஞரான (மிமிக்ரி) மறைந்த ஈழத்துச்சதன் பற்றிய கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது. தூரதிர்ஷ்டவசமாக ஈழத்துச்சதனின் பல்குரல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எதுவுமே எனக்கு வாய்த்திருக்கவில்லை. அதன் பின்னூட்டத்தில் கருத்துரைத்திருந்தவர்கள் பலரும், தாங்கள், தங்கள் பாடசாலைப் பருவங்களில் கண்டுகளித்த ஈழத்துச் சதனின் பல்குரல் நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திருந்தனர். ஈழத்துச் சதன் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியினைச் சேர்ந்தவர் என்று தவறுதலாகக் குறிப்பிட்ட கதியால், ஈழத்துச்சதன் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அதனை அறியத்தரும்படி குறிப்பிட்டிருந்தார். பின்னூட்டத்தில் அவர் பற்றிய தகவல்களை இடுவதிலும் பார்க்க, ஒரு பதிவாக இடுவதினூடாக அது பலரையும் சென்றடையும் வாய்ப்புக் கருதியே ஈழத்து முற்றத்தில் இந்தப் பதிவு.
அது 1990 இற்கு முற்பட்ட காலம். அப்போது யா/வேலணை சேர் வைத்தியலி்ங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலம் என்கின்ற மிக நீண்ட(?) பெயரால் அழைக்கப்படும் வேலணை மத்திய கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலம். தனித்து மிதிவண்டியில் சென்றுவரத் தொடங்கியிருந்த நேரம். சிலவேளைகளில் பாடசாலை விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்புகையில், சிலர் வழிமறித்து போகும் வழியில் தங்களை இறக்கிவிடும்படி தொற்றிக் கொள்வார்கள். வேலணை மத்திய கல்லூரிக்குப் போக ஆரம்பித்த காலங்களில் (ஐந்தாம் வகுப்பு/ஆறாம் ஆண்டு), சில வேளைகளில் நாங்களும், நாங்கள் செல்லும் வழிகளில் வரும் மிதிவண்டிகளில் தொற்றிக் கொள்வதுண்டு. சிலரை மறித்தாலும், அவர்கள் நிற்காமல் சென்று விடுவதும் உண்டு. அப்படியானவர்கள், அவர்களின் தோற்றத்தினையோ அல்லது வயதினையோ பொறுத்து நைன்ரி(90), செவின்ரி(70) என்று எம்மிடம் ஏச்சு வாங்குவதும் உண்டு. அவர்கள் மிதிவண்டியைத் திருப்பிக் கொண்டுவந்தால், செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவதும் நடப்பதுண்டு.
நான் சைக்கிளில தனித்து வரும் சந்தர்ப்பங்களில் என்னிடம் தொற்றிக் கொள்ளுபவர்களில் ஒரு குள்ளமான உருவம் உடையவரும் இருப்பார். பொதுவாக என்னைவிடப் பெரியவர்கள் என்றால் அவர்களை ஓடச்சொல்லிவிட்டு நான் சட்டத்தில் (Bicycle Bar) உட்கார்ந்து விடுவேன். ஆனால் இவர் குள்ளமாயிருப்பதாலும், அத்துடன் தனக்கு சைக்கிள் ஓடத் தெரியாது என்று சொல்வதாலும் (அது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது) நானே ஓடவேண்டியிருக்கும். முதல்தடவை ஏறியபோது அவராகவே பேச்சுக் கொடுத்து என்னைப்பற்றி விசாரித்தார். எனது வீட்டுக்காரர்களை, உறவினர்களை அவருக்கு நன்கு தெரிந்திருந்ததால் பதிலுக்கு நானும் அவரைப்பற்றிக் கேட்டபோது சோமக்கிளி என்று சொன்னால் எனது வீட்டுக்காரருக்குத் தன்னைத் தெரியும் என்றார். வீட்டில் கேட்டபோது, அவர்தான் மிருகங்கள் பறவைகள் போன்று சத்தமிட்டு நடித்துக் காட்டும் ஈழத்துச்சதன் என்றனர்.
பின்வந்த நாட்களில் அவரை மிதிவண்டியில் ஏற்றி ஓடுகையில் அவரிடம் மிருகங்களின் ஒலிகளை சத்தமிட்டுக் காட்டுமாறு வற்புறுத்தத் தொடங்கினேன். பின்னொரு நாளில் செய்து காட்டுவதாகச் சொல்லித் தட்டிக்கழித்து வந்தாலும் ஒருநாள் எனக்கே எனக்காக மட்டும் காகம், குயில், கோழி, தவளை போன்றவற்றின் ஒலிகளை சத்தமிட்டுக் காட்டினார். யானை, சிங்கம், புலி போன்றவை போல் சத்தமிட்டுக் காட்டுமாறும் வற்புறுத்தினேன். அவர் செய்தார். ஆயினும் அதற்கு முன்னர் அவ்விலங்குகளின் சத்தங்களைக் கேட்டிராததால் என்னால் அவற்றை இரசிக்கவோ அல்லது அவர் சரியாகத்தான் செய்கிறார் என்பதை உறுதி செய்யவோ முடியவில்லை. ஆனால் அதன் பின் அவரை மிருகங்களின் ஒலிகளைச் செய்து காட்டும்படி வற்புறுத்தக் கூடாது என்கின்ற எங்களுக்கிடையிலான ‘ஜென்ரில்மென் அக்கிரிமெண்ட்’டினால் நானும் அவரிடம் கேட்பதை விட்டுவிட்டேன்.
சோமக்கிளி என்று ஊரவர்களினாலும் (வேலணை) ஈழத்துச்சதன் என்று ஏனையவர்களாலும் அறியப்பட்டவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக எனது ஊரைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டேன். அனைவருக்குமே ஈழத்துசதனையும், அவரது உறவினர்களையும் தெரிந்திருநதாலும், சோமக்கிளி என்பது அவரது இயற்பெயரா என்பதை அவர்களால் நிச்சயப்படுத்த முடியவில்லை. ஏனெனில் அவர் சிறுவயதிலிருந்தே சோமக்கிளி என்றே அனைவராலும் அறியப்பட்டிருந்தார்/அழைக்கப்பட்டிருந்தார். ஆயினும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட ஒரு பல்குரல் நிகழ்ச்சியினை அடுத்து ஈழத்துச்சதன் என்கின்ற அடைமொழி அவருக்கு வழங்கப்பட்டுப் பின் அதுவே நிரந்தரமாயிற்று. 1950களில் பிறந்திருக்கக் கூடிய சோமக்கிளி அவர்களின் ஆரம்பகால வசிப்பிடம், வேலணை மத்திய கல்லூரியை அடுத்து அமைந்திருக்கும் வேலணை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அண்மையில், வேலணை-ஊர்காவற்றுறை வீதியில், அமைந்திருந்தாலும் பின்னாளில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால், அதன் பின்னான, அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியவில்லை (இத்தகவல்களைத் தந்துதவியவர்களுக்கு நன்றி).
செல்வச் செழிப்பின்மை காரணமாகச் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற யதார்த்த நிலைமைக்கு, தூரதிர்ஷ்டவசமாக ஈழத்துச்சதன் என பிரபலமாக அறியப்பட்ட சோமக்கிளி என்கின்ற அந்த அற்புதமான பல்குரல்க் கலைஞனும் விதிவிலக்காக அமைய முடியவில்லை. வேலணையையோ அன்றி மறறைய இடங்களைச் சேர்ந்தவர்களோ, அவரைப் பெரிதாய் மதித்ததாகவும் தெரியவில்லை.
முற்றத்து மல்லிகை எங்களுக்கு மணப்பதில்லைத்தானே!