பண்டிதர் சோ. தியாகராசபிள்ளை
1936 – 1947 ஆண்டுவரையுள்ள காலப் பகுதி தீவுப்பகுதியின் பொற்காலம் எனலாம். இலங்கை சட்டசபைத் தலைவராக வேலணையூர் பெருமகன் சேர்.வை.துரைசுவாமி வீற்றிருந்த காலப்பகுதி இது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நமது ஆசிரியர் நெடுந்தீவு முதல் தம்பாட்டிவரை பல பாடசாலைகளை அமைத்துக் கொடுத்தார். அது மட்டுமா? பிற்போக்கு நிலையிலிருந்த தீவுப்பகுதிக்கு கலங்கரை விளக்கமாயிருந்த வேலணையில் ஒரு மத்திய மகா வித்தியாலயத்தையும் சேர். வை.துரைசுவாமியின் ஆதரவுடன் அயராதுழைத்து நிறுவி 1946.01.17 ஆந் திகதி கோலாகலமாகத் திறப்பு விழாவினையும் நடத்தினார். அதற்கு வருகை தந்த கல்வி மந்திரி டாக்டர் கெளரவ சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா உபாத்தியாயரின் வரவேற்புரையை வியந்து பாராட்டியதை யாம் அறிவோம். இத்தொண்டு ஒன்றே ஆசிரியமணியை நினைவு கொள்ளப் போதுமானது.