வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை
திரு.பொ.மகாலிங்கம் – அதிபர்
சோளாவத்தை, மயிலப்புலம் ஆகிய குக் கிராமங்களையும் பள்ளம்புலத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய பிரதேசமே வேலணை வடக்கு என எல்லைப்படுத்தப் பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் செறிவு கூடியது. எனினும் இப்பிரதேசத்தில் நீண்டகாலமாக ஒரு ஆரம்பப்பாடசாலையேனும் இருக்கவில்லை.
இப்பகுதியைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வியைப் பெறுவதற்குக் கூட சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, வேலணை மேற்கு சைவப் பிரகாச வித்தியாசாலை, வேலணை சரஸ்வதி வித்தியாசாலை ஆகியவற்றில் ஒன்றிற்கே செல்ல வேண்டியிருந்தது.
இப்பாடசாலைகள் இப் பிரதேசத்திலிருந்து சராசரி 3.5 கிலோமீற்றர் துரத்தில் அமைந்திருந்தமையாலும், சீரான வீதிகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாமை யாலும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். கணிசமான பிள்ளைகள் உரிய வயதில் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்க முடியாத நிலையிலும் சில பிள்ளைகள் அறவே பாடசாலை செல்லாதும் இருந்தனர்.
இதனால் இப்பிரதேசத்தில் ஒரு – ஆரம்பப்பாடசாலை நிறுவ இப்பகுதி மக்கள் காலத்துக்கு காலம் முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவை ஒன்றும் செயலுருப் பெறவில்லை.
இம் முயற்சியில் இப்பிரதேசத்தில் பிறந்தவரும் கந்தர் மடத்தில் வசித்தவருமாகிய ஆசிரியர் திரு.சி.சதாசிவம்பிள்ளை அதீத அக்கறை காட்டி வந்தார்.
1951ஆம் ஆண்டளவில் இக் கிராமத்தவரான வர்த்தகர் திரு. இ. கைலாசபிள்ளை இக் கிராமத்தில் எப்படியாயினும் ஒரு பாடசாலையை நிறுவி விடவேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் தமது அயலவர்களான திரு.ச.தாமோதரம் பிள்ளை, திரு.க.சி.மயில்வாகனம், திரு.ச.இராசையா ஆகியோரையும் தம்முடன் இணைத்து ஒரு குழுவாக திரு. சி. சதாசிவம்பிள்ளை அவர்களின் உதவியுடன் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையாளர் திரு. இராசரத்தினம் அவர்களை அணுகி வேலணை வடக்கில் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையின் கீழ் ஒரு பாடசாலை நிறுவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பாடசாலை அமைக்கும் பணிகள் ஆரம்பமாயின.