வேலணை இலந்தைகாடு(வனம்) ஸ்ரீ சித்தி விநாயகர்
சித்திரையில் பெருமானின் திருவருளும், அடியார்கள், உபயகாரர்களின் உற்சாகமும் துணை நிற்க மண்டபம் அமைக்கும் பணியை ஆரம்பித்தார். அன்பர்கள் அடியார்களிடமிருந்து திரண்ட நிதியும், அவரது சொந்த நிதியும் பயன்படுத்தப்பட்டு பெரு மண்டபங்களாக ஆலயம் பொலிவு பெற்றது. மண்டப வேலைகள் யாவும் பூர்த்தியாக பரிவார மூர்த்திகளை அமைக்கும் பணி ஆரம்பமாயிற்று. முதலில் காவல் தெய்வமாகிய ஞான வைரவப் பெருமானுக்கு ஆலயம் அமைத்து சிவானுபானு பரமேஸ்வரக் குருக்கள் அவர்களால் 1974 பங்குனி உத்தர நன்னாளில் குடமுழுக்கும் நடாத்தப்பட்டது. தொடர்ந்து நவக்கிரக ஆலயம், ஆலய அயலவரான க.சு.செ.கணபதிப்பிள்ளை அவர்களின் நிதியுதவியுடன் தில்லையம் பலம் ஆச்சாரி அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. தொடர்ந்து படிப்படியாக கஜலெட்சுமி அம்பாள், முருகப்பெருமான், சனீஸ்வரப் பெருமான், சண்டேஸ்வரப் பெருமான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் ஆலயங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேறியது. ஆலயக் கட்டுமானப் பணிகள் பெரு வளர்ச்சி கண்டு அலங்கார உற்சவமும் சிறப்புற நடைபெற்று வந்தவேளை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானுக்கு ஓர் சித்திரத்தேர் உருவாக்கும் எண்ணம் ஆலய கர்த்தாவினதும் அடியார்களினதும் மனதில் உருவாயிற்று.
ஐங்கரனின் திருவருள் கைகூட 1976ஆம் ஆண்டு சித்திரத் தேருக்கான பணி ஆரம்பிக்கப்பட்டது. அடியார்கள், உபயகாரர்களிடமிருந்து திரண்ட நிதி, திரு வேலாயுத பிள்ளையின் பிரத்தியேக நிதி என தேர்ப்பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டு துரித கதியில் தேர்ப் பணிக்கான வேலைகள் நடைபெற்றன. இச் சித்திரத் தேரைக் கலைஞர் அராலியூர் திரு. சின்னத் தம்பி அமரசிங்கம் என்பவரே நிர்மாணித்துக் கொடுத்தார். இப்பணி 3 ஆண்டுகளில் நிறைவுபெற்று சித்திரத் தேருக்கான வெள்ளோட்டம் 1979இல் இடம்பெற்றது. ஆலய வரலாற்றில், 1979ஆம் ஆண்டு கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகி 10ஆம் நாள் தேர்த் திருவிழா புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திரத் தேரில் முதன் முறையாக விநாயகப் பெருமான் தேர் ஏறி வீதி உலா வந்தமை அடியார்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாகவும், இப்பிரதேச மக்களுக்கு ஒரு பெரு விழாவாகவும் அமைந்தது. அடுத்தநாள் (11ஆம் நாள்) தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுற்றது. தேர் பூர்த்தியாகியதும் தேர் மண்டபத் தேவை உடன் பூர்த்தியாக்கப்பட வேண்டியிருந்தமையால் ஆலயத்தின் அயலவரான திரு. செல்லப்பா சிற்சொரூபன் அவர்களால் தேர் மண்டபத்திற்கான அத்திவாரப் பேழை (சங்கு) வைக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவரது பங்களிப்புடனும், அன்பர்கள், அடியார்களது நிதியுதவியுடனும், தனது நிதியுடனும் தேர் மண்டபப் பணிகள் வெகு விரைவாக நிறைவேற்றி முடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வருடா வருடம் மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்ததுடன், ஆலய அறங்காவலரினால் ஆலய பரிபாலனம் தொடர்ந்தும் சிறப்பாக பரிபாலிக்கப்பட்டு வந்தது. 1988 இல் மண்டபத்தின் விஸ்தீரணத்திற்கு அமைவாக கர்ப்பக் கிருகம் (ஆதி மூலம்) அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பன விளங்காமையினால் 1988 ஆனி மாதம் பாலஸ்தானம் பணிணி மேற்கூறிய மண்டபங்கள் முற்றாக அகற்றப்பட்டு 1988 ஆடி 23 ஆம் நாள் அவற்றிற்கான அத்திவாரக்கல் நாட்டப்பெற்றது.