ஒரு துரோகியின் கதை
நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா?
‘நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி யோசிச்சுக் கொண்டே இருக்கிறீங்க? உங்களுக்கு அப்பிடி என்னதான் பிரச்சினை?’ என்று நான் கேட்டதற்கு, இப்படித்தான் அவர் என்னிடம் தனது கதையைச் சொல்லத்தொடங்கினார்.
அது 1983ஆம் ஆண்டு. அப்பாவின் புடவை வியாபாரம் நன்றாகச் செழித்து இலாபம் கொழித்துக் கொண்டிருந்த காலப்பகுதி. நான் வைத்தியராகும் கனவுடன் ஏ.எல் பரீட்சைக்கு தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். காலம் செய்த கோலமோ காடையர் செய்த கேவலமோ அப்பாவும் புடைவைக்கடைக்குள்ளேயே சிறிலாங்கா அரசின் காடையர்களால் தீயிட்டுக் கொல்லபட்டார். நடப்பதை அறியமுடியாத நிலையில் நாங்களும் ஏனைய தமிழர்களுடன் அகதிகளாகப் பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்து பின் லங்காராணியில் காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்தோம். இப்போது குடும்பப் பொறுப்பு என் தலையில் விழுந்தது. எனக்குப் பின்னே இரு தங்கைகள். வேலை தருவார் யாருமில்லை. யாழ்நகருக்குச் சென்று கடைகடையாய் ஏறி இறங்குகையில் தான் நல்லதம்பியாரைச் சந்தித்தேன். அவருக்கு அப்பாவைத் தெரிந்திருந்ததால் தனது புடைவைக் கடையில் நின்று வேலை பழகுமாறும் பிடித்திருந்தால் தொடர்ந்து வேலை செய்யுமாறும் கூறினார். கடவுள் இல்லையென்று யார் சொன்னது. அப்போது அவர் எனக்குக் கடவுளாகவே தெரிந்தார்.
கடையில் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் வேலைசெய்யத் தொடங்கி அவரின் நம்பிக்கைக்கும் உரியவனாகியிருக்கையில் ஒப்பறேஷன் லிபறேஷன் தோல்வியை அடுத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகி, பின் திலீபனின் தியாகச்சாவுடன் இந்தியப்படைகள் வடக்கு கிழக்கெங்கும் ஆக்கிரமிப்புப் படையாய் மாறியது. இப்போது எங்கள் கடைக்கு இந்திய புடைவை வியாபாரிகள் நேரடியாகவே குறைந்த விலைகளில் புடைவைகளைக் கொண்டுவந்து தரத் தொடங்கினார்கள். நல்லதம்பி ஐயாவும் பேரம் பேசி வாங்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைத்தார். எங்கள் கடையில் வியாபாரம் செழிக்கத் தொடங்கியது.
‘நீங்க ஏன் தனியா பிஸினஸ் செய்யக் கூடாது?’ இப்படித்தான் எங்களுக்கு வழமையாக புடைவைகள் கொண்டுவந்து தரும் அந்த வியாபாரி நல்லதம்பியார் இல்லாத ஒரு பொழுதில் என்னிடம் கேட்டான். அவன் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவிலிருந்து வரும் போது பல அன்பளிப்புப் பொருட்களை எனக்காகக் கொண்டுவந்து தருவதும் பதிலுக்கு நான் உள்ளூர் பொருட்களைக் கொடுப்பதுமாக எங்களுக்குள் வியாபாரத்தைத் தாண்டியும் உறவு பலப்படுத்தப்பட்டிருந்தது
‘அவர் எனக்குக் கடவுள் மாதிரி. அவரால தான் எங்கட குடும்பம் இப்ப நல்லா இருக்கு அவருக்கு நான் துரோகம் செய்ய மாட்டன்’
‘நீங்க என்ன பேசுறீங்க? இது துரோகமா? நீங்களும் முன்னேற வேணும் தானே’
‘பரவாயில்லை. இவர் என்னை நல்லவே கவனிச்சுக் கொள்ளுறேர். அவர் இருக்கிற வரைக்கும் அவரை விட்டிட்டு நான் தனியாத் தொழில் தொடங்க மாட்டன்’
‘உங்களைப் போல ஒரு தொழிலாளி கிடைச்சிருக்கிறதுக்கு அவர் கொடுத்து வைச்சிருக்கோணும்’
அந்தக் கொடுப்பினை நல்லதம்பியாருக்கு நீடிக்கவில்லை. சிலநாட்களின் பின் மாலையில் வீட்டுக்குச் செல்லும் வழியில் பலாலி வீதியல் விரைந்து வந்த இராணுவ வண்டியுடன் அவரது உந்துருளி மோதி அந்த இடத்திலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்சனையால் கடையை விற்பதென்று முடிவாகியது. வழமை போன்று கடைக்கு புடைவை கொண்டு வந்தவனிடம் இனிக் கொண்டுவரத்தேவையில்லையென்று விசயத்தைச் சொன்னதும் அவன் கலங்கி விட்டான்.
‘நீங்க என்னுடைய லோயல் கஸ்டமர். என்ரை மெயின் பிஸினஸே உங்களில தான் தங்கியிருக்கு. நீங்களும் இப்பை என்னைக் கைவிட்டிட்டா என்ரை பிஸினசும் போயிரும். நீங்க ஏன் தனிய இப்ப கடையை ஆரம்பிக்கக் கூடாது?’
‘அதுக்கு என்னட்டைக் காசில்லையே’
தாடையைச் சொறிந்தவன், வின் வின் பிஸினஸ் மாதிரி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இந்த பிசினசைச் செய்வம். என்ரை பேரில லீகலா எதுவும் செய்யேலாது. அதால உங்கடை பேரிலயே நீங்க கடையை வேண்டி பிஸினஸையும் றெஜிஸ்ரர் பண்ணுங்க. எனக்கு லாபத்தில பங்கு தாங்க. இதுக்கு நீங்க சரியெண்டா, இப்பையே நடக்க வேண்டிய அலுவல்களைப் பாருங்க.’
எதிர்பார்த்ததிலும் விட இலகுவாக கடையும் வியாபாரமும் எனது கைக்கு மாறியது. கடையிற்கான புதிய டிசைனிலான பெயர்ப் பலகையையும் அவனே குறைந்த செலவில் இந்தியாவிலிருந்து வருவித்திருந்தான். யாழ்நகரின் மையப் பகுதியில் யாழ் பேரூந்து நிலையத்தை நோக்கியபடியே மின்சாரநிலைய வீதியில் எங்கள் கடை ஜொலித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது.
அவன் யாழ்ப்பாணம் வரும் நாட்களிலெல்லாம் கடையிலேயே இரவிலும் தங்கி விடுவதால் எனக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது.
இப்போது காலம் மாறியது. இந்திய இராணுவம் வெளியேறும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இனி அவனால் வந்து போக முடியுமோ தெரியாது என்பதால் அவனது பங்கினை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் கடையை விற்கத் தீர்மானித்து அவனிடம் அது பற்றிச் சொன்னேன்.
‘கடையை வித்துறாதீங்க சார், உங்ககிட்ட எவ்வளவு துட்டு இருக்கோ அதை மட்டும் கொடுத்திடுங்க. நீங்களும் நானும் அப்படியா பழகியிருக்கோம். நான் வரமுடியலின்னாலும் பரவால்ல. இந்தக்கடையை மட்டும் மூடிறாதீங்க. அந்த போர்டு, அது என் ஞாபகமாக எப்பவுமே இருக்கட்டும். அதைக் கழட்டிடாதீங்க சார். சரியா?’
நட்பு சாதிமதம் மட்டுமல்ல அதுநாடு இனம் கடந்தெல்லாம் வியாபித்து வளரக்கூடியதென்பது புரிந்தது. பாரதி பாடியபடி எங்கிருந்தோ வந்தான். ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன். பொதுவாக மலையாளிகளைத் தமிழ் துவேஷிகள் என்பார்கள். ஆனால் இவன் ஒரு மலையாளியாய் இருந்து கொண்டு ஒரு தமிழனான என்னை உய்வித்து விட்டிருக்கிறான் .
இப்போது காலம் மாறியிருந்தது. யாழ் பேரூந்து நிலையமும் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் மாற்றப்பட்டுவிட்டிருந்தது. ஆனாலும் மாறாமல் அந்த வில்லுத்தகடு மட்டும் இந்த மின்சார நிலைய வீதியைத் தன் இரவிருப்பிடமாக மாற்றமல் வைத்திருந்தது. காலையில் தமிழீழ வானொலியில் போடப்படும் தத்துவப் பாடல்களுக்கு அபிநயம் பிடத்தபடியும் தன்பாட்டிற்குப் புலம்பிய படியும் யாழ் நகரை வலம் வந்து கொண்டிருந்தது.
ஒருநாள் மதியநேரம் அப்பாவிற்குத் திதி கொடுப்பதற்கு முனியப்பர் கோவிலுக்குச் செல்வதற்காக மூத்திர ஒழுங்கைக்குள்ளால் மிதிவண்டியினை விட்டேன். வீரசிங்கம் மண்டபம் தாண்டி முற்றவெளியை அண்மிக்கையில், அசோகா ஹோட்டலுக்குப் பின்னாலிருந்த புல்லுக்குளத்துப் பற்றைக்குள் வில்லுத்தகடு மறைந்து நிற்பது தெரிந்தது. சத்தமிட்டேன் திடுக்கிட்டுத் திரும்பியது இழித்துக் கொண்டே சாரத்தைத் தூக்கி கையால் பிடித்து ஆட்டிக் காட்டியது.
த்தூ…. முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அதன் பின் அதனைக் காணும் தருணங்களிலெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்வேன். அது கடையின் முன்னே வந்து நின்று ஏதோதோ கத்தும் பின் கடை முகப்பைப் பார்த்து ஏதேதோ பிசத்தும்.
சில மாதங்களின் பின் மாத்தையா பற்றிய கதைகள் வதந்திகளாகப் பரவத் தொடங்கின. மணிக்கூட்டுக் கோபுரவீதியல் அமைந்திருந்த தையல் கடையொன்றிலிருந்து சில றோ உளவாளிகள் பிடிபட்டதாய்க் கதைத்துக் கொண்டார்கள். அப்படியானவொரு நாளில்தான் வியாபாரம் முடித்து கடை பூட்டிக்கொண்டிருந்த தருணத்தில் அவர்கள் வந்து என்னைக் கைது செய்து பங்கருக்குள் அடைத்தார்கள். பின்வந்த நாட்களில் பற்பொடி தருகையிலேயே பொழுதுகள் விடிவதை உணரக்கூடியதாகவிருந்தது. சிலமாதங்களின் பின்,
‘நீங்க எங்கட மண்ணுக்குச் சொய்த துரோகத்தை மன்னிச்சு விடுறம். இனியாவது ஒழுங்கா இருங்கோ’
– எண்டு சொல்லி சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்குக் கிட்டவா இறக்கி விட்டாங்கள். பிறகுதான் தெரிஞ்சுது யாழ்ப்பாணத்தை விட்டு எல்லாரும் இடம் பெயர்ந்திற்றினம் எண்டும் இப்ப யாழ்ப்பாணம் முழுக்க ஆமிதான் நிக்கெண்டும்.
தம்பி நீங்களே சொல்லுங்கோ நான் அப்பிடி என்ன துரோகம் செய்தனான்?
ஏனோ தெரியவில்லை. யாழ் இடப்பெயர்விற்கு சில மாதங்களின் முன்பு யாழ்நகரின் மத்தியல் அமைந்திருந்த புடைவைக்கடையொன்றின் பெயர்ப்பலகையொன்றிற்குள் பற்றரியில் இயங்கும் அதிசக்திவாய்ந்த வீடியோகமராவும் சில தொலைத் தொடர்பு சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கதையொன்று அடிபட்டது என் நினைவினில் வந்துபோனது.
* * *
பின்குறிப்பு: 96.ல் ஊருக்குத் திரும்பியவர்களில் சிலர் இந்த வில்லுத்தகடு, இராணுவ வாகனத்தில் மிடுக்கான சீருடையுடன் திரிந்ததை கண்டதாய்ச் சொன்னார்கள்.