யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04
இன்று நாம் பருத்தியடைப்பு என்று அழைக்கப்படும் இந்த கிராம மக்கள் ஆதி காலத்தில் கடல்வழி வாணிபத்தில் சிறந்து விளங்கிய வணிகர்களாகவும் சிறந்த கடல் படகு ஓட்டிகளாகவும் இருந்து இருக்கின்றார்கள். காவலூர் துறைமுகம் அண்மையில் இருந்ததால் துறைமுகம் சார்ந்த பணிகளிலும் அநேகமானோர் பணியாற்றி இருக்கின்றார்கள். அன்னியர் வருகைக்கு பின்னர் மிக பெரும் பண பயிர் ஆக அக்காலத்தில் கருதப்பட்ட பருத்தி பயிரிடப்பட்ட ஒரு விவசாய கிராமமாக இருந்து பிற்காலத்தில் விவசாயத்தை தொழிலாக கொண்ட மக்கள் தொழிலில் நிமித்தம் பரந்துவாழும் நிலமாக மாறியது. இங்கு வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் புகையிலை, மிளகாய் பயிரிடுவதில் முன்னோடியாக விளங்கினார்கள்.
கடல் வழி வாணிபத்தின் மூலம் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த மக்கள் இங்கு இருந்ததால் தங்கள் பிள்ளைகளுக்கு தென்னிந்தியாவுக்கும் அனுப்பி கலைகளை கற்று கொடுத்த ஈழத்தவர்களில் பரித்தியடைப்பு மக்களும் முதன்மை வகித்தார்கள். கால ஓட்டத்தில் காவலூர் துறைமுகத்தின் கடல் வாணிப செயல்பாடுகள் குறைவடைய தமது பாரம்பரிய தொழிலான விவசாயத்தோடு, ஏனைய சிறு தொழில்களோடும், அரச பணிகளில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை நடை முறை வாழ்கையில் ஏற்பட கல்வியிலும் இந்த மக்கள் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக ஆரம்ப கல்வியை உள்ளூர் முனியப்பர் முன் பள்ளி, மற்றும் கதிரேசானந்தா வித்தியாலயத்திலும், உயர் நிலை கல்வியை ஏனைய அண்மைய கிராம பாடசாலைகளிலும் யாழில் உள்ள பிரபல பாடசாலைகளிலும் சென்று கற்றார்கள்.
இங்கு வாழ்ந்த மக்கள் வழிபடும் குல தெய்வங்களாக பிள்ளையார், அம்மன், முனியப்பர், ஆகிய தெய்வங்களை வழிபட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக கண்ணகை அம்மன், ஆலயம், ஸ்ரீ கதிரேசன் கோவில், முனியப்பர் கோவில், தேவன் கணை பிள்ளையார் கோவில் என்பனவற்றை குறிப்பிடலாம்.
யாழ் /50 என்ற இலக்கம் கொண்ட ஒரு கிராம சேவகர் அலகை கொண்டு நிர்வகிக்க பட்டு சாதாரண வசதிகளோடு வாழ்ந்துவந்த இந்த கிராம மக்களும் போர் தந்த வடுக்களால் நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் இடம் பெயர்ந்து வாழவேண்டிய நிலை 1990 களின் ஆரம்பத்தில் இவர்களுக்கும் ஏற்பட்டது. உறவுகளையும் ஊரையும் பிரிந்து இடம்பெயர்ந்து எங்கு வாழ்ந்தாலும் தமது பாரம்பரிய கலைகள் பண்பாடுகள் என்பனவற்றை மறவாத மக்களாக உலக பரப்பில் வாழ்த்து வரும் இவர்கள் என்றாவது எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு நாளில் ஊர்திரும்பி நல்வாழ்வு வாழவேண்டும் என்ற கனவோடு, கிராம முன்னேற்றத்துக்கும் உறவுகளுக்கும் இன்றைய நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் பரித்தியடைப்பு மக்கள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றார்கள்.