நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
எமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த பொருளியல் பட்டதாரியான திரு. திருநீலகண்டம் அவர்கள் மாணவர்களின் ஆன்மிக உணர்வை வளர்க்கும் முகமாக கல்லூரி வளாகத்தில் ஓர் ஆலயம் கட்டப்படவேண்டும் என்ற தனது எண்ணத்தை வேண்டுகோளாக முன்வைத்தார். இவரது கருத்தை ஏற்றுக்கொண்ட அதிபரும் கல்லூரி நிர்வாகமும் பண்டிதர் திரு. இராமநாதர் மருதையனார் அவர்களதும் மற்றும் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையுடனும் தெட்சணாமூர்த்தி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டிட வேலைகள் துரிதமாக நடைபெற்ற வேளை துரதிஸ்டவசமாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் கல்லூரிக்கான இலவச பஸ்சில் ஏறும்போது நெரிசலில் தள்ளப்பட்டு பஸ்சினால் மிதிபட்டு இறக்க நேர்ந்தது. கல்லூரி வாசலில் நடைபெற்ற துக்ககரமான சம்பவத்தால் கோயில் கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது.
எனது கல்லூரிக் காலத்தில் குறிப்பாக எழுபதுகளின் இறுதிப் பகுதியில் மணல் தரைகொண்ட ஆலயமண்டபத்தில் சங்கீத வகுப்புகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த 1975ஆம் ஆண்டிலிருந்து 10ஆம் வகுப்பு வரை (1979) ஆலய முன்றலில் நடைபெற்ற சங்கீத வகுப்புகளில் முழுமையாகப் பங்குபற்றிய நினைவலைகள் இன்றும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.“கும்பாபிஷேகம் செய்யவெண்டும் என்ற பெருநோக்கம் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் இருந்துகொண்டே வந்தது. அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் ஏதோவொரு தடை ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது”
எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்தக் கோயிலைக் கட்டிமுடித்து நடராஜப் பெருமான் சிலையைக் கொண்டுவந்து கும்பாபிஷேகம் செய்யவெண்டும் என்ற பெருநோக்கம் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் இருந்துகொண்டே வந்தது. அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் ஏதோவொரு தடை ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. இருந்தபோதும் 1983ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற திரு. சிவராஜரட்ணம் அவர்கள் மிகவும் மென்மையானவர் எவருடனும் தேவையற்ற விவாதம் செய்யாதவர் ஆனால், காரியங்களைக் கச்சிதமாக முடிப்பதில் வல்லவர் தெய்வபக்தி மிக்கவர்.