வேலணை சரஸ்வதி வித்தியாசாலை
ஆரம்பகாலத்தில் திறமையும் சேவை மனப்பான்மையும் கொண்ட எமது ஊர் ஆசிரியர்கள் இப் பாடசாலையில் கற்பித் தமையால் எமது கிராமத்து மாணவர்கள் மட்டுமன்றி மண்கும்பான், அல்லைப்பிட்டி, சரவணை, நாரந்தனை, கரம்பொன், சுருவில் ஆகிய கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இப்பாடசாலையை நாடி வந்தனர். அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருந்தமையால், பாடசாலைக்கு அண்மையில் இருந்த செல்லப்பா விதானையார் வீட்டிலும், பாடசாலையிலும் துர இட மாணவர்கள் தங்கி இருந்து கற்பதற்கு விடுதி வசதியும்
பாடசாலை முகாமையாளரால் செய்து கொடுக்கப்பட்டது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1932 ஆம் ஆண்டு வரை ஸ்தாபகர் திரு.வை. விஜயரத்தினம் அவர்களே முகாமையாளராக கடமையாற்றினார். 1932 இல் பாடசாலையின் முகாமைத்துவம் சைவ வித்தியா விருத்திச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டு பாடசாலை அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு இன்றுவரை அரசாங்க பாடசாலையாக இயங்குகின்றது. பாடசாலையின் ஆரம்பகாலந் தொட்டே திறமையான ஆசிரியர்கள் கற்பித்து வந்தமையால் பாடசாலையின் கல்வித்தரம் மிக உயர்ந்த நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது.
ஆளுமையும் அர்ப்பணிப்பும் மிக்க அதிபர்களான திரு. நாகலிங்கம், திரு. காசிப்பிள்ளை, பண்டிதர் இ.மருதையினார், திரு. சபாபதி, திரு.அ.செல்லையா ஆகியோர் பாடசாலையின் செயற்பாடுகளை சிறந்த முறையில் நெறிப்படுத் தி பாடசாலையை சீரான வளர்ச்சிப்பாதையில் இட்டுச் சென்றனர். திரு.அ.செல்லையா அவர்கள் தொடர்ச்சியாக 35 வருடங் களுக்கு மேல் அதிபராக சேவையாற்றி மாணவர்கள் பெற்றோர்களின் நன்மதிப்பைப் பெற்று அந்நன்மதிப்பின் வெளிப்பாடாக எல்லோரும் அவரைப் “பெரிய வாத்தியார்” என்று அழைத்தனர். திரு.அ.செல்லையா அவர்களைத் தொடர்ந்து பண்டிதர் அ.பொன்னுத்துரை, திரு.சு.சீவரெத்தினம், திரு. சுப்பிரமணியம், திரு.நா.கனகசபாபதி, திரு.பொ.நடராசா, திரு.ஆ. அருமைநாயகம் ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றியுள்ளனர். தற்போது திரு.பாஸ்கரன் அதிபராக கடமையாற்றுகின்றார்.