வேலணை சரஸ்வதி வித்தியாசாலை
எனினும் சைவசமயச் சூழலில் முறையான கல்வியைப் பெறவேண்டுமாயின் ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட வண்ணார்பணிணை சைவப் பிரகாச வித்தியாசாலைக்கே செல்லவேண்டி யிருந்தது. இந் நிலையை அவதானித்த வேலணை கிழக்கைச் சேர்ந்த திரு.வைத்தியலிங்கம் விஜயரெத்தினம் என்னும் பெரியார், ஊர்மக்களால் ‘பெரியவர்’ என மரியாதையுடன் அழைக்கப்பட்ட எமது கிராமத்தின் தலைமகன், வேலணைச் சிறார்கள் சைவசமய கலாசார பண்பாட்டுச் சூழலில் கல்விகற்க அவ்வூரில் ஒரு சைவப்பாடசாலை நிறுவ வேண்டும் என உறுதி பூண்டார்.
அவரது விருப்பத்தை செயற்படுத்த அந்நாளில் காலி நகரில் பிரபல வர்த்தகராக விளங்கிய திரு. சோமசுந்தரம், திரு.மூத்ததம்பி சதாசிவம் , சப் போஸ்மாஸ்டர் வைத்திலிங்கம், திரு.சபாபதி.நாகலிங்கம் (கிளாக்கர் நாகலிங்கம்) ஆகியோர்களும் முன்வரவே 1925 ஆம் ஆண்டுத் தைப்பூச நன்னாளில் வங்களா வடியில் மூன்று பிரதான வீதிகளின் சந்திப்புக்கு அருகாமையில் பெரியவர் விஜயரத்தினம் அவர்களின் சொந்தக் காணியில் சைவப் பாடசாலைக்கான அடிக்கல் அந்நாள் யாழ் இந்துக்கல்லூரி அதிபர். திரு. W. A. ரோப் (Mr.W.A.Troup) அவர்களால் நாட்டப்பட்டது.
அவ்விழாவில் பிரதம விருந்தினரான திரு.W.A.ரோப் அவர்களை சம்பிரதாயபூர்வமாக வரவேற்று திரு. விஜயரத்தினம் அவர்களின் சகோதரியின் புதல்வரான திரு. இராசையா ஆங்கிலத்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு. இராசையா அவர்களின் பேச்சாற்றலால் கவரப்பட்ட திரு. ரோப் அவர்கள் அவரது திறமையை வெகுவாகப் பாராட்டியதோடு வேலணை மக்களின் திறமைக்கு இராசையா ஒரு சான்று எனவும், இங்கு உருவாகப் போகும் பாடசாலை பல நூறு இராசையாக்களை உருவாக்கும் எனவும் வாழ்த்தினார். பாடசாலையின் உருவாக்கத்திற்கு திரு.விஜயரெத்தினம் அவர்கள் மலாயா நாட்டில் தொழில் புரிந்த அவரது நண்பர்கள், உறவினர்கள், ஊர்மக்களிடமும் நிதி உதவி பெற்றுக் கொண்டதோடு,ஊர்மக்களில் சிலரும் பாடசாலைக் கட்டுமானப் பணிகளுக்குத் தம்மாலான பங்களிப்பை நல்கினர்.