யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03
ஊர்காவற்றுறை 1947ம் ஆண்டில் பட்டின சபை அந்தஸ்தைப் பெற்றது. ஐந்து வட்டாரப் பிரிவுகளை அடக்கிய பட்டினப் பரிபாலனம் இங்கிருந்தது. எவ்வாறாயினும் 1990 வரை பல சமூகத்தையும் சேர்ந்த 12000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊர்காவற்றுறைப் பட்டின எல்லைக்குள் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. கத்தோலிக்க மதம் சார்ந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இச்சனத் தொகை முக்கிய ஏனைய சமுகத்தினரையும் கொண்டு கணிப்பிடபட்டுள்ளது என்பதற்கு இங்குள்ள ஆலயங்கள் சான்று பகருகின்றன. இங்கு பெரும் பாலும் இங்கு இருந்த பூர்வீக ஆதி சைவ மக்கள் மதமாற்றம் பெற்றே கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டார்கள் என்று கருதபடுகின்றது. அதற்கு ஆதாரமாக இன்றும் பெயர்மாறாமல் இருக்கும் அம்பலர் புலம் ஐயப்பன் தோட்டம் என்பன சான்றாகும். இங்கு மதங்களால் வேறுபட்ட சமூகத்தினர் வாழ்ந்தாலும், சிவன் கோவில் திருவிழா நிகழ்வுகளாய் இருந்தாலும் புனித அந்தோனியார், புனித மரியாள் ஆலய நிகழ்வுகளாய் இருந்தாலும் மக்கள் ஒன்றுபட்டு நின்று கலைகளை வளர்த்தார்கள், விசேடமாக சின்னமேளம், இசை நடனம் நாட்டுக்கூத்து என சகல கலைகளையும் வளர்த்தார்கள். விசேட நிகழ்வுகளில் அண்ணாவியார்களின் நெறியாள்கையில் இங்கு நிகழும் நாட்டுகூத்தை காண ஈழத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள் என்று சொல்லப்படுகின்றது.
இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தை பாரம்பரிய தொழிலாக கொண்டு இருந்தாலும் கடல்வழி வியாபாரத்தையும், மீன் பிடி தொழிலையும், கால்நடை வளர்ப்பு, கப்பல் கட்டும் தொழில், போன்றவற்றையும் ,போர்த்துகேயர் வருகைக்கு பின்னர் மேலதிகமாக நெசவு தொழிலையும் செய்து வந்ததாக அறிய முடிகின்றது .1960 ஆண்டுவரை பெரும் தொகை யாழ் மற்றும் தீவக தொழிலார்கள் இங்குள்ள துறைமுக பகுதியில் வேலைக்கு அமர்த்தபட்டு இருந்ததாக அறியமுடிகின்றது.
கல்வியில் சிறந்து விளங்கிய இந்த கிராமத்தில் பல தவப்புதல்வர்கள் உலக அரங்கில் புகழ் பெற்ற அரசியல் ஆளர்களாகவும் அறிவியல் ஆளர்களாகவும் விளங்கி இருக்கின்றார்கள், இவர்கள் கல்வியில் புனித மரியாள் மகளீர் வித்தியாலயம் ,புனித அந்தோனியார் கல்லூரி என்பனவும் அயல் கிராம பாடசாலைகளும் காவலூர்மக்களின் கல்வியில் பெரும் சேவை வழங்கியது.
விளையாட்டு துறையிலும் காவலூர் பற்றி சில குறிப்புகள் இருக்கிறது மாட்டு வண்டில் ஓட்டம், இங்கு ஒரு பாரம்பரிய கலையாகவும் வீர விளையாட்டாகவும் அன்று தொட்டு நடத்தி வந்து இருக்கின்றார்கள். ஊர்காவற்றுறையிலிருந்து வடக்குநோக்கி எட்டாவது கல் தொலைவிலே நாய்க்குட்டியான் வாய்க்கால் என்ற இடத்தில் உள்ள பெரு வெளி கொண்ட பிரதேசத்தில் காவலூர் மக்கள் நடத்தும் மாட்டு வண்டி போட்டி வரலாற்று சிறப்புமிக்கது ,படகோட்ட போட்டியும் நீச்சல் போட்டியும் நடைபெற்று இருக்கின்றது. பிற்காலத்தில் சைக்கில் ஓட்டம் மற்றும் ஏனைய விளையாட்டு போட்டிகளும் இங்கு சிறப்பு நிகழ்வாக வருடம் தோறும் நடைபெற்று வந்திருகின்றது.