யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03
காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்காவற்துறையும் வேலணைத்தீவின் ஒரு அதி முக்கியம் வாய்ந்த கிராமம் ஆகும். வேலணை தீவின் ஏனைய கிராம மக்களை அன்னிய படை எடுப்புக்களில் இருந்து காக்கும் காவல் கிராமமாக இந்த கிராமம் முதன்மையில் இருந்ததால் காவலூர் என்று அழைக்கப்பட்டது. கடல்கோளின் போது யாழில் இருந்து தீவுகள் பிரிந்த வேளையில் சம்பு நகரில் இருந்த துறைமுகம் பேரழிவை சந்தித்த பின்னர் காவலூர் துறைமுகமானது. அதற்கு பின் இந்த கிராமத்தை ஊர்காவல்துறை என்ற பெயர் மாற்றி கொண்டு அழைக்க தொடங்கினார்கள்.
மகாவம்சத்தில் வழமை போல் எம் வரலாற்றை கீழ்மைபடுத்த பன்றிகள் ஏற்றிய துறைமுகம் என்று வர்ணித்து ஊறா தோட்ட என்றும் குறிப்பிடபட்டு உள்ளதும் இங்கு குறிப்பிடதக்கது. போர்த்துகேய மொழியில் கெயிஸ் என்றால் துறை முகம் என்று அர்த்தம். இதை வைத்து போர்த்துகேயரால் அவர்கள் ஆண்ட காலத்தில் இந்த இடம் துறைமுகம் சார்ந்த பகுதியாய் இருந்ததால் கெயிஸ் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம். பின்வந்த ஆங்கிலேயர் அதில் தங்கள் உச்சரிப்பை புகுத்தி பின்னர் கயிற்ஸ் என்று அழைக்க தொடங்கி இருக்கலாம். நாம் தான் ஆங்கில மோகம் கொண்டவர்கள் என்பதால் நாமும் நாகரீகமாக இந்த இடத்தை இன்று கயிற்ஸ் என்று அழைக்கின்றோம்.
தென்னிந்தியாவுடனும் ஏனைய தெற்காசிய நாடுகளுடனும் சில அரபு நாடுகளுடனும் கடல்வழி வர்த்தக தொடர்புகளை கொண்டு இருந்த ஈழ மக்கள் இந்த துறைமுகத்தில் இருந்து, ஆரம்பத்தில் யானைகளை ஏற்றுமதி செய்தும், குதிரைகள், மாடுகள், ஆடுகள், கால்நடைகளை மாற்றீடாக இறக்குமதி செய்ததாகவும் குறிப்புக்கள் உள்ளது. ஈழத்தை கைபற்றி, எம்மை ஆண்ட அன்னியர்களான போர்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர், ஈழத்தில் சூறையாடிய பொருட்களை இந்த துறைமுகம் ஊடாக தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தியதாகவும் குறிப்புக்கள் உள்ளது. அன்னிய ஆட்சியாளர்கள் தங்களுக்கான உணவுபொருட்களை தங்கள் ஏனைய காலணி நாடுகளில் இருந்தும் தங்கள் நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யவும் இந்த துறைமுகத்தை பயன்படுத்தினார்கள். அவ்வாறே பர்மா தற்போதைய மியான்மார் இல் இருந்து முதல் முதலில் ஆங்கிலேயர் அரிசியை இறக்குமதி செய்ய இந்த துறைமுகத்தை பயன்படுத்தியதாக குறிப்புக்களில் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் பட்டுகோட்டை செட்டிமார் தங்கள் வியாபாரத்துக்கு இந்த துறைமுகத்தை பெருதும் பயன்படுத்தினர்.